குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற உள்ளதாகப் பரவிய தகவலை அடுத்து, இந்து முன்னணியினர் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் பழமையான ரயிலடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி, அதை அகற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு இந்து முன்னணியினர் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் கோவிலை அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நேற்று தகவல் பரவியது. இத்தகவல் பரவியதைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தின் முன்பு இந்து முன்னணியினரும் இந்து மகா சபையினரும் திரண்டனர். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்டத் தலைவர் முத்துராஜ், மாவட்டச் செயலாளர் அருணாசலம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேல் உட்படப் பலர் கலந்துகொண்டனர். கோவிலை அகற்றக் கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ரயில்வே நிலையப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தகவலறிந்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நரேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். போலீசார் போராட்டக்காரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் கோவிலை இடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வெறும் வதந்தியே ஆகும்; கோவிலை அகற்ற மாட்டோம் என உறுதியளித்தனர்.
காவல்துறையின் இந்த உறுதியை ஏற்று, சுமார் 2 மணி நேரமாக நடைபெற்று வந்த ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு இந்து முன்னணியினரும் இந்து மகாசபையினரும் அமைதியாகக் கலைந்து சென்றனர்.


