தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து, தூத்துக்குடி கடற்கரை பூங்காக்கள் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தெற்கு இந்தியப் பெருங்கடலில், இந்தியக் கடற்கரையில் இருந்து சுமார் 10,000 கி.மீ தொலைவில் கடந்த ஆகஸ்ட் 13 அன்று அதிக ஆற்றல் கொண்ட நீண்டகால அலைகள் உருவாயின. வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த அலைகளின் தாக்கம் இன்று மாலை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகள் 1.2 மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். நீண்டகால கடல் அலைகளும் அதிக அலைநீரும் இணையும் போது, கடலோரத் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. சூறாவளிக் காற்று மற்றும் கள்ளக்கடல் அச்சுறுத்தல் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தாழ்வான கடலோரப் பகுதிகளில் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறிய படகுகளைக் கரைக்கு அருகில் இயக்கக் கூடாது. படகுகள் சேதமடைவதைத் தவிர்க்க, ஒன்றுக்கொன்று போதுமான இடைவெளியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா மற்றும் புதிய துறைமுகம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைப் பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்களின் நுழைவாயில்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் காவல்துறையினர் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.


