திருச்செந்தூா் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதந்தோறும் பௌா்ணமியன்று, பக்தா்கள் கடற்கரையில் இரவு தங்கியிருந்து, அதிகாலையில் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா்.
ஆவணி மாத பௌா்ணமியானது திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தொடங்கி இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணி வரை இருந்தது. இதனால் திங்கள்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் குவியத் தொடங்கினா். பௌா்ணமியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இரவு லட்சக்கணக்கான பக்தா்கள் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கி கடற்கரை மணலில் குழி அமைத்து, அதில் விளக்கேற்றி வழிபட்டனா். இதனால் கடற்கரை முழுவதும் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.
பக்தா்களுக்கு தேவையான வசதிகளை அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.


