கே.துரைசாமிபுரத்தைச் சார்ந்த பார்வை குறைபாடுள்ள கிரிக்கெட் வீரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கே.துரைசாமிபுரத்தைச் சார்ந்த பார்வை குறைபாடுள்ள கிரிக்கெட் வீரர் மகராஜன் என்பவர் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல உதவ வேண்டும் எனவும், இங்கிலாந்தில் வெற்றி பெற்றதற்காக தமிழக அரசின் பாராட்டையும் வழங்க வேண்டுமென தங்களுக்கு டிவிட்டர் மூலம் கோரிக்கை அனுப்பியிருந்தோம்.
இதையடுத்து தாங்கள் மகராஜாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு சாம்பியன்ஸ் பவுண்டேசன் மூலம் அமெரிக்காவில் நடக்க உள்ள பயிற்சியில் பங்கேற்க தேவையான 1,20,000 ரூபாயை வழங்கியுள்ளீர்கள். இதற்காக தூத்துக்குடி மாவட்ட பொது மக்களின் சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தமிழக அரசின் விளையாட்டு பிரிவில் மகராஜனுக்கு உரிய அரசு வேலையையும் வழங்க அன்புடன் வேண்டுகிறோம். மேலும் மகராஜனுக்கு ஏற்கனவே உதவிகள் செய்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி ஆகியோருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


