தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு கன்னிகா தம்பதியினர். இவர்களது மகன் பிரேம்குமார். 9 வயதான இவர் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று விடுமுறை தினம் என்பதால் பிரேம்குமார் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் சரண்யா தம்பதியினர் மகன் ரமேஷ் குமார்(9) சேர்ந்து அருகே உள்ள காயாமொழி குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
பிரேம்குமார் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் குளத்தில் சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளான். அதை பார்த்த அவரது நண்பர் ரமேஷ்குமார் அவனை காப்பாற்ற முயன்றுள்ளான். ஆனால் பிரேம்குமார் சகதியில் சிக்கி மயங்கி உள்ளான். அவரை வெளியே இழுக்கும் முயற்சியின் போது ரமேஷ்குமாரும் சிக்கியுள்ளான். இதை அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து மயங்கிய நிலையில் ரமேஷ்குமாரை வெளியே இழுத்துள்ளனர். பிரேம்குமாரை தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ரமேஷ்குமாரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட நேரத்திற்கு பின்னர் பிரேம்குமார் உடலை இறந்த நிலையில் மீட்டனர். மீட்ட உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறை நாளில் குளத்திற்கு குளிக்கச் சென்ற 5 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


