கல்விக்குப் பெயர் பெற்றது நாமக்கல் மாவட்டம். இங்கு, ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 200 மையங்களில் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதேபோல், பதினோறாம் வகுப்புக்கான தேர்வு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு ஜி.டி.ஆர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிவருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) பொன்.குமார் நேற்று முன்தினம் கொல்லிமலைக்கு ஆய்வுப் பணிக்காக சென்றார். அப்போது, வாழவந்தி நாட்டிலுள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்திருந்ததைப் பார்த்திருக்கிறார். அவருக்கு ஏதோ பொறிதட்ட, அந்த ஜெராக்ஸ் கடைக்குச் சென்றிருக்கிறார். அவர் அங்கு சென்று பார்த்தபோது, `மைக்ரோ பிட்’ என்னும் சிறிய வகையில் பாடப் புத்தகத்திலிருந்து மாணவர்கள் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
வாழவந்தி நாடுநா.ராஜமுருகன் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்தக் கடையிலிருந்து அவற்றை பறிமுதல் செய்தவர், ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், மாணவ மாணவிகளிடமிருந்து சுமார் அரை கிலோ எடை அளவில் ஜெராக்ஸ் பிட்டுகளை அவர் பறிமுதல் செய்தார். மாணவர்களின் நலன் கருதி, அவர்களை எச்சரித்து அனுப்பியதாகத் தெரிகிறது. அதேபோல், நேற்று (17 – ம் தேதி) காலை 9:30 மணியளவில் அனைத்துத் தேர்வு மையங்களிலும் முன்னதாகவே மாணவர்களிடமிருந்து பிட் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெராக்ஸ் கடைகளில் பொதுத்தேர்வுக்கான பிட் தயாரித்து கொடுக்கப்பட்டுவருவதும் தெரியவந்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் அரசுத் தேர்வுகள் பறக்கும் படையினர் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக மையங்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் இரண்டு கிலோவுக்கும் அதிகமான பிட் பேப்பர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஜெராக்ஸ் கடைகளில் மாணவர்களுக்கு பிட் தயாரித்து தந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


