முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் 15.08.2026 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன:
தகுதி மற்றும் நிபந்தனைகள்:
15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 01.04.2025 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2026 அன்று 35 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (01.04.2025 முதல் 31.03.2026 வரை) மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவைகள் மட்டுமே விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (இதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்).
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காகத் தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவர்கள் செய்த சேவை சமுதாயத்தில் கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் இருக்கும் நற்பெயர் மற்றும் செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கக் கடைசி நாள் மற்றும் நேரம்: 06.07.2026 மாலை 5.45 மணி ஆகும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் செய்தி மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


