கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது வரவேற்பு ஆற்றினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மற்றும் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர் துவக்க உரையாற்றினார்.
முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அலியார், துணைத்தலைவர் அன்வர்தீன், மமக முன்னாள் மாவட்டச் செயலாளர் மோத்தி முசம்மில், ஜாமியா பள்ளி ஜமாத் துணை செயலாளர் அஸ்ஹாப், பைத்துல்மால் துணைத்தலைவர் முஹம்மத் நாக்கீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகைதீன் ஜாமியா பள்ளி இமாம் அஸன் ஞானியார், பாப்புலர் பிரண்ட் மாவட்டச் செயலாளர் செய்யது அலி கரீம், தமுமுக மாவட்ட தலைவர் ஆஸாத், மியாகான்பள்ளி மஸ்ஜிதுல் அஸ்ஹர் பள்ளி இமாம் செய்யது அப்துல் கரீம், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிம், விடுதலை சிறுத்தை கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்குட்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ் நன்றி உரையாற்றினார்.
இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டனர். இதில் தீர்ப்பிற்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ்சை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


