முன்கதை சுருக்கம்
கிராமத்தில் வாழ்ந்த முத்துகிளி செல்போன் தொடர்பில் வீட்டுக்கு தெரியாமல் வயதான தம்பதியினருடன் மும்பை சென்று விடுகிறாள். அவளை நவீன போன் தொடர்பு வசதியுடன் கண்டு பிடிக்கிறான் நவீன். வயதான தம்பதிகளிடம் இருந்து முத்துகிளியை காப்பாற்றும் போது போலிசுக்கும் அவர்களுக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடக்கிறது. போலிசில் மாட்டிக்கொண்ட தம்பதிகள் கொரோனா நோயில் இறந்து விடவே, உடன் இருந்த முத்துகிளி உள்பட தேடிச்சென்ற உறவினர்கள் கொரோனா முகாமில் வைக்கப்படுகிறார்கள். அதன் பின் போலிஸ் கமிஷனர் உதவியுடன் இரண்டு காரில் ஈபாஸ் மூலமாக தமிழகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. அதை பற்றி புரியாமல் தவித்தார் இளங்கோ. உண்மையை புரிந்து கொள்ள சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அவன் பூர்வீகம் தெரிந்தவர் தாமிரபரணி தாத்தா. இவன் அவரை பார்க்க சென்ற போது இறந்து விட்டார். தொடர்ந்து யாரிடம் இது பற்றி பேச என தெரியாமல் தவித்தான் சந்திரன். இதற்கிடையில் முத்துகிளி குடும்ப கோயில் கொடை விழா வருகிறது. அதில் குடும்பத்தினை தவிர வேறு யாரும் கலந்து கொள்ள கூடாது. அப்படி கலந்துகொண்டால் மறு கொடைக்கு அவர் உயிரோடு இருக்க மாட்டார்கள் என பலர் கூறியும் கேட்காமல் சந்திரன் அந்த கோயில் கொடையில் கலந்துகொண்டான். கொடை விழா ஆரம்பிக்கும் முன்பே பெரிய சாமியாடி காலில் அரிவாள் வெட்டு பட்டது. இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்றான் சந்திரன். குணமாகி கோயில் கொடைவிழா நடக்க சந்திரன் காரணமாகி விடுகிறான். இதனால் அனைவருக்கும் இவன் மேல் நல்ல எண்ணம் உருவாகிறது. எனவே நிச்சயம் முத்துகிளியை நாம் திருமணம் முடித்து கொள்ளலாம் என ஆசையுடன் இருந்தான். ஆனால் முத்துகிளியை பெண் பார்கக வந்தவர்களால் ஏற்ப்பட்ட பிரச்சனையால் இவன் ஊரை காலி செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால் மறுநாள் காலையில் “லிங்க நாடார் பனையில் இருந்து விழுந்து இறந்து விட்டார் உடனே வா” என வாசு கூறினார். எனவே காரில் ஊரை நோக்கி கிளம்பினான். அங்கு அவர் உடலை ஆஸ்பத்திரியில் கொண்டு வைக்க போலிசுடன் உதவி செய்கிறான் சந்திரன். இனி.
ரத்னம் சந்திரனிடம் கூறினார், “தம்பி முன்னாடி காலத்தில இருந்த ஒத்துமை இப்போ நம்ம மக்க கிட்ட இல்ல . ஒரு காலத்தில ஒரு வீட்டில இழவு விழுந்துட்டா. அவ்வளவுவேரும் துடிச்சி போயிருவாவ. வீட்டுக்கு கொஞ்சம் பணம் பிரிச்சி அவியள அடக்கம் செய்வாவ-. இங்க பாத்தியா இழவு வீட்டில புடுங்கினது லாபமுன்னு எல்லா பயலும் உருவாகிட்டானுவலே”.
ரத்னம் கவலையுடன் பேசினார். சந்திரனுக்கு இது எல்லாமே புதுசாகவே இருந்தது.
“ஏன்யா இவியளுக்கு எல்லாம் சும்மா தெண்டம் கொடுக்கிய. பேசமா திருநெல்வேலி மயான சுடுகாட்டுல போயி தகனம் செஞ்சா துட்டு செலவு இல்லியே”.
சில யூ டியூப்பில் அனாதை பிணங்களை எரிக்கும் தாமிரபரணி கரையில் உள்ள சிந்துபூந்துறை எரியூட்டும் மாயனம் குறித்து சந்திரன் பார்த்து இருக்கிறான். எனவே தான் அதைப்பற்றி கூறினான்.
“ஆமாய்யா, முனிசிபாலிட்டியில 2500 ரூபாய் கேப்பாவ. அதையும் எழுதி கொடுத்தா லயன்ஸ் கிளப்பு காரவிய அந்த பணத்தை திருப்பி கொடுத்து புடுவாவ. எரிச்சிட்டு கொஞ்சம் சாம்பல தருவாவ. அப்படியே தாமிரபரணி ஆத்துல கரைச்சிட்டு வீட்டுக்கு வந்துரலாம். ஆனால நம்ம வீட்டு பொம்பளைய ஒரு சொல்லு கேக்க மாட்டாளுவளே. எங்க பூமியில தான் என் ராசாவை புதைக்கணுமுன்னு சொல்லுவாளுவ. எம் புருசன் என்ன அனாதையா. மனமா போய் சேரனுமுன்னு சொல்லி கூப்பாடு போடுவாளுவ. ம். மூச்சி போன பொறவு எங்க பொதைச்சா என்ன செத்தவரு வந்து கேட்கய்யா போறாரு. இல்லை மணம் குறைஞ்சி போச்சின்னு எழுந்தா வரப்போறாவ”.
அமைதியாக வந்தான் சந்திரன்.
ரத்னம் பேசினார். “இதையெல்லாம் மனசில வச்சிகிட்டுத்தான் இப்படி அலையிறானுவ. ஊருக்கு நாலு காலிப்பயலுவ இருப்பானுவ. அவனுவள சீவி விட இரண்டு பெரிசு இருக்கும். அவுகளுக்கு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் சீமை சரக்கை வாங்கி அடிக்கணும். அதுதான் கொள்கையா வச்சிருக்காணுவ”.
“இருந்தாலும் இப்படியாய்யா. ஒரு அளவு வேண்டுடாமாய்யா”
“விடுய்யா எல்லோருடைய மனசும் சுருங்கி போச்சிய்யா. அன்னியோயம் கெட்டுபோச்சிய்யா. நம்ம நாடே ரொம்ப மோசமா போச்சிய்யா. என்னைக்கு பிரசிடெண்ட எலக்சனுக்கு பணம் கொடுக்க ஆரம்பிச்சாவளோ. அன்னைக்கே எல்லாம் குட்டிசுவரா போயிட்டுய்யா. பணம் தந்தாதான் ஓட்டுபோடுவேன்னு என்னைக்கு மக்க மாறினாவளோ அன்னைக்கே ஊரு பாழ போச்சிய்யா. ஊருக்குள்ள அண்ணன் தம்பி பாசம் மோசமா போச்சிய்யா. பெண்டாட்டி புருசன் உறவுகூட மாயமாக போச்சிய்யா. எல்லோரும் வாழுறோம். ஏன் வாழுறோம். எதுக்கு வாழுறோம். ஒண்ணுமே புரியலை. இந்த உலகம் ஒரு பாழும் கிணறு போல இருக்குய்யா.”
இரண்டு சொட்டு கண்ணீர் ரத்னம் கண்ணில் இருந்து விழுந்தது. அதை கவனித்தான் சந்திரன். ” பாவம் இந்த மனுசன் சொல்ல முடியாத நிறைய கஷ்டத்தை மனசுல வைச்சி அடக்கிகிட்டு இருக்காரு”
சந்திரன், “அய்யா மனசை ரொம்ப போட்டு வதச்சிக்காதீங்க. அமைதியா இருங்கய்யா. கண்ணீர் விடாதீங்க. என்னால தாங்கவே முடியலைய்யா”
“இல்லைய்யா. நான் அழ மாட்டேன். இந்த உலகநடப்பை பாத்தவுடனே என் கண்ணுல தண்ணீ தானா வருதுய்யா. எல்லாமே மோசமா இருக்குய்யா. இந்த உலகம் சூனியம் பிடிச்சு போச்சுய்யா.”
இருவரும் அமைதியாக வந்தார்கள்.
“சரி. விடுய்யா. நடக்க வேண்டிய காரியத்தை பாக்கணும். நாளைக்கு காரியம் செய்ய நாவிதனை கூப்பிடனும். அவன் நாளைக்கு எங்க«யும் புடுங்கிட்டுபோயிட கூடாது பாரு”.
போனை எடுத்தார். நாவிதன் முருகனுக்கு போன் போட்டார்.
“அய்யா . ரத்னம் அய்யா. வணக்கமுய்யா. கேள்வி பட்டேன். லிங்க நாடாரு பனையில இருந்து விழுந்து சோலி முடிஞ்சி போயிட்டாவளாமே”.
“ஆமாம் முருகா. நாளைக்குதான் அடக்கம். கண்டிப்பா வந்திரு”.
“அய்யா தப்பா நினைக்காதீய்யா . இப்போ நான் காரியம் செய்ய வருதது கிடையாதுய்யா”. அதிர்ந்தார் ரத்னம்.
“என்னப்பா சொல்ற. உங்கப்பா சேசுமரியான் காலத்தில இருந்தே உங்க குடும்பம் தானே இந்த தொழிலை செஞ்சிகிட்டு இருக்கு. நீ இப்படி தீடீருன்னு குண்டை தூக்கி போட்டா எப்படி-?”
“இருந்துச்சிய்யா. வழிவழியா உங்களுக்கு சேவை செஞ்சு நாங்கள் என்னைத்தை பெரிசா வாழ்ந்துட்டோம். துட்டி வீட்டுக்கு வந்தா நாலணா, எட்டணா தருவீயா. குடிக்க சீமை சாரயம் தருவியே. குடிச்சி குடலு புண்ணா போச்சி. அம்புடுத்தான். நாங்க என்னத்தை கண்டோம்”.
“அய்யோ முருகா இதையெல்லாம பேசிற நேரமாடே. நாளைக்கு வந்துடுடே”.
“அய்யா. உங்க ஊருக் காரகவிய என்னை மதிக்கவே மாட்டுக்காவ. அங்க வந்தா அடிமை தனம் பண்ணுதாவ எனக்கு பிடிக்கலை”.
“ஏடே . யாரும் பேச மாட்டாவடே. நீ வா எல்லாத்தையும் நான் பாத்துக்குவேன்”. ரத்னம் கெஞ்சினார்.
“எய்யா. வெளியூரு நாசுவன் வந்தா காரியம் செய்ய 5 ஆயிரம் கொடுக்காவ. எனக்கு 250 ரூபாய்க்கு மேலே தர மாட்டுக்கியே. எனக்கு ஒரு 3 ஆயிரமாவது வேணும். நீங்க சரின்னு சொன்னாத்தான் வருவேன்”.
“ஏடே ஊரு காரன் பந்தியில தாரதை வாங்கிக்க. மீதி பணம் உனக்கு என்ன வேணுமோ கேளு. நான் தனியா தாரேடே”.
ரத்னம் சொன்னார்.
“ரத்னம் அய்யா நீங்க சொல்றதாலத்தான் வாறேன். எனக்கு நீங்கத்தான் பொறுப்பு ஆமாம்”.
“நான் தாரேன்டே. வா. வா”.
“யய்யா இப்பவே பஜாருல கடையை வைச்சி முடி வெட்டினா தினமும் 1000 ரூபாய் சம்பதிப்பேன். ஒரு சேவிங், கட்டிங், 150 ரூபாய் தலைக்கு வாங்கி புடுவேன். நான் ஊர் ஊருன்னு போய் சோலி பாத்து என்னத்தை கண்டேன். இன்னைக்கு உம்மை முவத்துக்கவும், லிங்க நாடார் குணத்துக்காவவும் தான் வாறேன். அடுத்தப்பல என்னை கூப்பிட கூடாதுய்யா”
“சரி டே. சரி. டே கோப்படாதே”
போனை வைத்தார்.
“என்ன அய்யா யாரு இப்படி கறாலா பேசுறாரு”.
“பேசத்தான் செய்வான். பிறவு. இவனை தண்ணீயை போட்டுட்டு என்னா பாடு படுத்துறானுவ. அவனை அங்க வா இங்க வா ன்னு அடிமையா பாடா படுத்துறானுவ. சங்கை அழுத்தி ஊதும்பானுவ. அவன் ஊதுனா என்னல ஊதுதன்னு சண்டை போடுவானுவ. பொறவு மனுசனுக்கு கோவம் வாறாது . இவனுவளும் மனுசன் தானே”.
“ஏய்யா தெரியாமத்தான் கேட்கேன். எதுக்கு நாசுவனை தேடுதிய. பேசாம ஊருல ஒருத்தரு இந்த காரியம் பாக்க சொல்ல வேண்டியது தானே”.
“ம். முடியவே முடியாது. நம்ம நாடாரு சமூகத்திலே ஆண்டாண்டு காலமா நடக்கிறது இதுதான். அதை மாத்த முடியாது”.
சந்திரன் இவரை நோக்கி பார்த்தார். தலையாட்டியபடி பேச ஆரம்பித்தார் ரத்னம்.
“இவனோட அப்பா சேசுமரியான் இருப்பாரு. நான் அப்போ சின்ன பையன். ஓட்டை டவுசரு போட்டுருப்பேன். அப்போ சேசுமரியானை பாத்தாலே பயமான இருக்கும். சேசுமரியான் முடி வெட்ட வாராருன்னா, ஓடிப்போய் ஒழிஞ்சிகிடுவோம். ரொம்ப போல்டான ஆளு. அப்போதெல்லாம் தினமும் ராத்திரி வீட்டுக்கு வீடு சாப்பாடு போடுவாவ. «சுசுமரியான் வீட்டம்மா கோயில் பிள்ளை நாரு பெட்டியில அதை போய் வாங்கிட்டு வாருவ. ஏழை பணக்காரருன்னு பாகுபாடு பாக்காம எல்லாத்தையும் ஒண்ணா குழப்பி சாப்பிடுவாவ”.
சந்திரனுக்கு வித்தியாசமாக இருந்தது.
நாசுவருககு ஒரு வீடு, வண்ணாருக்கு ஒரு வீடு இருக்கும். இரண்டு வீட்காரங்களும் ஊர் மக்களுக்கு சேவை செய்வாவ. சேசுமரியானை ஒரு நாளு தேவர் ஒருத்தர் அடிக்க வந்துட்டாரு. சேசுமரியானுககு கோவம் வந்துட்டு, “யோவ் தேவரே. முறுக்கின மீசை வச்சா நீரு பெரிய இவரா. நீர் ஒரு வீட்டில தான் சாப்பிடுறீரேரு. நான் சாணக்குடியில வீடு வீடா சோறு வாங்கி சாப்பிடுதவன். யாருக்கு பலம் இருக்கும் பாத்திருமா? என திருப்பி அடிக்க போயிட்டாரு. நிலைகுலைஞ்சி போனாரு தேவரு. “யோவ் நீரு பெரிய வெட்டருவா வெட்ட கொண்டு வருவீரு. நான் சின்ன கத்திதான் வைச்சியருக்கேன். ஒரு விரலை வச்சே உம்மை கிடத்தி புடுவேன். பாப்புமா?” என்றார்.
“தேவர் பயந்தே போயிட்டாரு. உண்மைதான் சேசுமரியான் வர்மம் தட்டுவாரு. சுளுக்கு எடுத்து விடுவாரு . பெரிய வைத்தியரு. களரி அடிமுறை கத்துக்கிட்டவரு. முக்கிய நரம்புல தட்டுனா எதிராளியை போய் சேர்ந்துடுவானுவ. சிலரை மய’கமடைய செஞ்சி புடுவாரு. அப்புறமா நரம்பை பிடிச்சி எழுப்பியும் விட்டுருவாரு. இதனால இவரை கண்டாலே அவ்வளவு பேரும் பயந்து போயிருவாவ. அவரு வீட்டம்மா கோயில் பிள்ளையும் பெரிய மருத்தவச்சி, கொதிக்கி பிடிப்பாவ”.
“அது என்னய்யா கொதிக்கி”.
“சின்ன பிள்ளைய சரியா சாப்பிடலானாலும், வயித்தால போனாலும் இந்த அம்மா கிட்ட கூட்டிட்டு வருவாவ. இந்தம்மா ஒரு தட்டுல கொஞ்சம் தண்ணீ வச்சிட்டு, சோறு போட்டுருவாவ. அப்புறம் ஒரு சொம்பு கொண்டு வந்து வச்சிக்கிடுவாவ. பொறவு துணி ஒன்னை எடுத்து வயித்தில தடவி அதை எரிச்சி சொம்புக்குள்ள போடுவாவ. அப்புறம் அந்த சொம்பை கொதிக்கி பிடிச்சவிய வயித்தில தடவி தலையை சுத்தி பிளேட்டில கமத்துவாவ. சும்மா தட்டுல உள்ள தண்ணீ டர்ரு புர்ன்னு சத்தம் போட்டுக்கிட்டு வத்திபோவும். அதைதான் கொதிக்கி பிடிக்கிறதுன்னு சொல்லுவவா”.
ரத்னம் சிரித்து கொண்டார்.
“சாப்பிடும் போது சிலர் நம்மை பாத்துக்கிட்டே இருந்தாலும் அவிய நம்ம சாப்பாடு மேலே கண்ணு போடுதாவன்னு அர்த்தம். அதை தான் கொதிக்கிம்பாவ”.
“ஊருல வண்ணான் நாசுவன் தான் பெரிய வைத்தியரு. பேருகாலம் பார்க்க இப்ப இருக்க மாரி ஆஸ்பத்திரி கிடையாதுல்லா. இவிய தான் பெரிய டாக்டரு. கூடவே இருந்து பேருகாலம் பாப்பாவிய”.
ஆச்சரியத்தில் சந்திரன் நெற்றி சுருங்கியது.
“மொத்ததுல்ல சேசுமரியானும், கோயில் பிள்ளையும் இல்லைன்னு அந்த ஊருல ஒரு அசைவும் இருக்காது”.
சந்திரன் ரசித்து கேட்டான்.
“சேசுமரியான் ரொம்ப கோபக்காரரு. கல்யாணம் வந்தா முத ஆளா நின்னு முகூர்த்த காலு நட்டுறது. மறுநாள் கல்யாணத்தில அலந்தரம் பிச்சுபோடுறது எல்லாமே அவருதான். துஷ்டி வீட்டிலேயும் முதல் ஆளு இவருத்தான். எல்லா காரியமும் இவர் தான் செய்யணும். பாடியை குளிப்பாட்டி வைக்கிறது. அப்புறம் நீர் மாலைக்கு போறது. அங்க சடங்கு செஞ்சி, பிள்ளையளுக்கு பூணுல் சடங்கு செஞ்சு வரது. பொம்பளை பிள்ளையல பட்டம் கட்ட வைக்கிறது. எல்லாம் இவருத்தான்”.
“யம்மா பொம்பளை பிள்ளைய பட்டம் கட்டுங்க. வாயிக்கு அரிசி போடுங்க” என சிம்ம குரலுல கர்ஜிப்பாரு. மொத்த அழுகை கூட்டமே இவர் சத்தத்துல அப்படியே அமைதியாயிரும். அப்புறம் பாடியை தூக்கிட்டு போகும் போது சுடுகாட்டு வரைக்கு சங்கு ஊதிக்கிட்டு வருவாரு. சும்மா சங்கு சத்தம் எட்டு திக்கும் ஒலிக்கும். அப்புறம் புதை குழியில சடங்கு செய்றது. ஆத்துல இருந்த கொள்ளி கலயத்தில நீர் எடுத்துட்டு வர்றது. வாரிசுகளுக்கு மொட்டை போடுறது. எத்தனை மக்க இருந்தாலும் இவரு ஒருத்தரே மொட்டை வேகமா போடுவாரு. அதுகப்புறம் அந்த பாடியை உள்ளே வச்சி மண்ணை மூடி, மறுநாள் காரியம் செய்யறது. மூனாம் நாள் செங்கல் கரைக்கிறது. 16 வது நாள் காரியம் பண்ணுறது. 41 வது நாள் காரியம் என எல்லாவற்றையும் இந்த மனுசன் தான் முன் நின்னு செய்வாரு”.
“அப்படின்னா அவருத்தான் இந்த குடும்ப தலைவன் மாரின்னு சொல்லுங்க”
“ ஆமாம் ஊர் முழுக்க ஏசுமரியான் இல்லாம ஒரு இம்மி நகராது. அவனை குடிமகன், ஊர் தலைமகனுன்னு எல்லோரும் கொண்டாடுவோம்”.
“ஆகா. கிராமம் கிராமம்தான்”.
“ஏசுமரியான் ரோசக்காரரு. ஒரு சமயம் இவன் கிட்ட உலக்க நாடாரு வம்பு இழுத்துக்கிட்டே இருந்தாரு. “ஏடே சேசுமரியான் நீ. என்ன பெரிய புடுங்கியாவே. நீ ஊர் அடிமைடே” என்றார்.
“நீர் வருவீருவே. உலக்க நாடாரே ஒரு நாளு நீர் எங்கிட்ட வருவீருவே” என ஏசுமரியான் சிரித்து கொண்டார்.
ஒரு நாள் முடி வெட்டும் போது, கத்தியை எடுத்து உலக்க நாடார் கழுத்தில் வைச்சாரு சேசுமரியான்.
“யோவ் உலக்க நாடரே. நான் யாருன்னு காட்டட்டுமா. கொஞ்சம் மேலே சீவனா காது போயிரும். கழுத்தில வைச்சி அழுத்துனா உயிர் போயிரும் . பாப்புமா. யாரு புடுங்கின்னு” என்றார்.
உலக்கநாடார் அழுதே விட்டார். “ஏடே சும்மா ஜாலிக்கு சொன்னேன்டே. நீ. மனசுல வச்சிக்காதே” என்றார்.
சிரித்துக்கொண்டே சொன்னார் சேசுமரியான், “உலக்க நாடரே ரோட்டில நடந்து போகும்போது பாத்து போவும், என்னைக்காவது எசக்கு பிசக்கா காலை ஒடிச்சிட்டு வரப்போறீரு”
“ஆனால் இளகின மனசு யாருக்கும் தீங்கு செய்ய மாட்டாரு. ஒரு நாளு உலக்க நாடாரு மாட்டு வண்டியில இருந்து விழுந்துட்டார். வண்டி சக்கரம் அவர் காலுல ஏறிட்டு. ஏசுமரியான் கிட்டே தூக்கிட்டு வந்தாவ.
உலக்க நாடாரு, ஏடே ஏசுமரியான். நான் எதுவும் சொன்னேன்னு நினைச்சி ஏடாக்கூடாம எதுவும் பண்ணிபுடாதவே”. என்றார்.
சிரித்தார் ஏசுமரியான், “யோவ் உலக்க நாடாரே. நம்ம வம்சம் அப்படி வம்சம் இல்லைவே. ஒரு பழமொழி கேட்டு இருக்கீறாவே. உடைஞ்ச காலோட இருந்தாலும் நாடார் கை வைச்சா அது நல்ல காலா மாறிடும் . உங்களுக்கே அந்த பவர் இருந்தா. நான் நாடாருக்கு தலை மகன். உங்களோட மூத்தவன். என் கை வைச்சாலே நல்லா ஆயிருவேரு. எம் தம்பி மாருவ நீங்க. உங்களை நான் பலி தீப்பானாக்கும் என்று சொல்லி விட்டு மருத்துவம் பார்க்க ஆரம்பித்து விட்டார். சேவிங் பண்ண, முடி வெட்ட காசு எல்லாம் சேசுமரியான் வாங்க மாட்டாரு. வருசம் தோறும் வீட்டுக்கு வீடு நெல்லுதான் பிரிப்பாரு”.
“நாடாரு மக்க பத்ரகாளிக்கிட்ட வரம் பெற்ற மக்க”.
சந்திரன் ரத்னம் சொன்ன கதையெல்லாம் அப்படியே ஆச்சரியமாக கேட்டுக்கொண்டே இருந்தார்.
“அய்யா, சேசுமரியான் சொன்னது எனக்கு எதுவுமே புரியலை. நாடார் மக்களுக்கு நாவிதர்கள் தலைப்புள்ளையா?”
“ஆமாம். அதுக்கு ஒரு கதையே இருக்கு என கூறி விட்டு அந்த கதையை கூற ஆரம்பித்தார்” ரத்னம்.
நாமும் கண்ணை மூடிக்கொண்டு அந்த கதையை கேட்போம்.
தேவலோக கன்னிகைகள் ஏழுபேர் பூலோகத்திலுள்ள நீரோடையில் குளித்துக் கொண்டிருந்த போது, இந்திரன் என்ற கடவுள் அவர்களைப் பாரத்து விட்டார். இந்திரன் அக் கன்னிகைகள் அணிந்திருந்த சேலைகளைத் திரட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் தண்ணீரிலிருந்து வெளிப்படுவது வரையிலும் கொடிகளின் மறைவில் காத்திருந்தார். கன்னிகைகள் வெளிப்பட்ட போது அவர்கள் ஒவ்வொருவர் மீது இந்திரன் காதல் கொண்டார். அதன் விளைவாக ஏழு கன்னிகைகளும் ஏழு ஆண் குழந்தைகளை ஈன்றெடுத்தனர். அதன் பின்பு பூலேகத்தில் அந்த குழந்தைகளை விட்டு விட்டுக் கன்னியர் அனைவரும் தேவலோகம் சென்று விட்டனர். பெண் தெய்வமான பத்திரகாளி அக் குழந்தைகளின் மீது இரக்கங்கொண்டார். அக் குழந்தைகளைத் தனது சொந்தக் குழந்தைகளாக வளர்த்து வந்தாள். அவ்வாறிருந்த போது ஒரு நாள் மதுரையிலுள்ள வைகை நதி வெள்ளப் பெருக்கால் உடைந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து மதுரை நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்து விடுமோ எனப் பயம் ஏற்பட்டது. எனவே மன்னன் ஒவ்வொரு ஆண்மகனும் கூடைகளில் மண் எடுத்துத் தங்கள் தலையில் வைத்துச் சுமந்து வந்து வைகைக் கரையை மீண்டும் கட்டவேண்டு மெனக் கட்ளையிடடான். மேற்குறிப்பிட்டுள்ள ஏழு இளம் மைந்தர்களும் செல்வந்தகள் இல்லை என்றாலும் மன்னனின் கட்டளைக்கு மறுத்து விட்டனர். “மகுடம் சூட்டப்படவேண்டிய எங்கள் தலைகளில் கூடைகளைச் சுமக்க மாட்டோம் எனக்கூறி அவ்விளைஞர்கள் மறுத்துவிட்டனர். அதைக் கேட்டுக் கடுங்கோபமற்ற அரசன் இளைஞர்களின் ஒருவனைக் கழுத்தளவு மண்ணிற்குள் நிறுத்தி வைத்துப் புதைத்து அவனது தலையை யானையை விடடு இடறச் செய்யக் கட்டளையிட்டான். கட்ளையும் நிறைவேற்றப்பட்டது . தலை மிதிபட்டு இரத்த வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட போதிலும் கூட , “நான் கூடையைத் தொட மாட்டேன் என்று அந்த தலை சத்தமிட்டுக்கொண்டே உருண்டு ஓடியது. அதைக்கேட்டு மேலும் கோபம் கொண்ட அரசன் இரண்டாம் இளைஞனையும் அவ்வாறு தண்டிக்க கட்டளையிட்டான். இரண்டாம் இளைஞனின் தலை “அத்தலைக்கு இத்தலை பொய்தலையா? ஏழுதலை இடரினும் கூடைதொடேன். கூடை தொடேன். கூடை தொடேன்” எனக் கூறிக்கொண்டே உருண்டு சென்றது. அந்த அற்புதம் கண்டு பயந்து போன மன்னன் எஞ்சிய ஐந்து இளைஞர்களையும் விடுவித்தான். அவர்களிலிருந்து தான் நாடார் இனம் தோன்றிற்று. நாடார்கள் இன்றும் கூடையைத் தொடுதில்லை என்பதில் மிகவும் கறாறாக உள்ளனர்.
இந்த மகன்களில் தலை மகன் தான் நாவிதன். பத்ரகாளி தாயின் உத்தரவின் படி எல்லோருக்கு மூத்த மகனே இவன். அனைவரையும் குளிப்பாட்டுவது, உடை உடுத்தி , முடி வெட்டி அழகு பார்ப்பது, அனைவரைக்கும் கம்பு சண்டை, கத்தி சண்டை மல்லு போன்ற வித்தைகளை கற்றுக்கொடுப்பது, எல்லாமே இந்த மூத்த மகனான குடிமகன் தான்.
அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சனைகள் நாடாருக்குள் ஏற்பட்டது. ஒரு காலத்தில் நாடாண்ட பரம்பரை பிற்காலத்தில் நாயக்கர் ஆட்சி காலத்தில் நாடோடியாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாடார்களுக்கு பல தொந்தரவு வந்துச்சு. குறிப்பா கன்னியாகுமரி மாவட்டத்தில தோள்சேலை போடக்கூடாது. எந்த இடத்தில் உள்ள கோயிலுக்குள் நுழைய கூடாது. மத்த சாதிக்காரங்க தொட்டாத்தான் தீட்டு, நாடாருக பார்த்தாலே தீட்டுன்னு சொன்ன காலம். ரொம்ப வேதனை படுற காலம்
ஆங்காங்கே பெரிய கோயிலுக்குள் .நுழைய முடியாது. கோயில் கோபுரத்தையும் நம்ம மக்க ஏறிட்டுத்தான் பாக்கலாமே தவிர, உள்ளே போக முடியாது. குடியிருப்புக்குள்ள நடமாட முடியாது. விடிலி காட்டுக்குள்ளத்தான் ஓடுங்கி கிடக்கணும். அந்த மாரி மோசமா இருந்த காலத்திலே நமக்கு காரியம் செய்ய யாரும் வர மாட்டாவ. செத்து கிடந்தாலும் துட்டி கேக்க, தூக்கி சுமக்க நம்ம தான் முன்வரவேண்டும். அப்பத்தான் நம்ம குடிமகன்தான் எல்லா காரியமும் செய்யணும். அந்த காலத்தில நம்ம தலையில துண்ட கட்டகூடாய்யா. அப்படி கட்டுனா அடி உதை தான். அந்த காலத்திலத்தான் அய்யா வைகுண்டர் தோன்றி தலையில தலைப்பா கட்ட வைச்சாரு. இப்பவும் பாருங்க அய்யா வழி கோயிலில தலைப்பா கட்டித்தான் திருமணம் முடிப்பாவ. நம்ம மக்கள் வீட்ல திருமணம் செய்யும் போது தலையில தலைப்பாய் கட்டிக்கிட்டு சும்மா கம்பீரமா நின்னு வேலை செய்வாக குடிமகனுவ. அதனால தான் குடுமகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம். இன்னைக்கும் காரியம் எல்லாம் அவியள வைச்சே செய்றோம்”.
என ரத்தனம் மிகப்பெரிய கதையை சொல்லி முடித்தார்.
ஆச்சரியமாக இருந்தது, சந்திரனுக்கு. நாடார் சமுதாயம் என்பது மும்பையில் இருக்கும்போது என்னவென்ற தெரியாது? சொந்தக்காரங்க திருநெல்வேலி பக்கம் இருக்கிறதா சொல்லுவாங்க. சித்தப்பா எப்போவாது போனுல பேசுவாரு. ஆனால் இந்த ஊர் வரலாறுகளையும் பூர்விகத்தினையும் சுமந்து கிட்டுல்ல இருக்கு. இவ்வளவு பெரிய சமுதாயத்தில இல்லையா பிறந்து இருக்கேன். அது புரிய எனக்கு இவ்வளவு நாளா ஆயிடுச்சு”
இருவரும் காரில் வீட்டுக்கு வந்தார்கள். ரத்னம் பண்ணை வீட்டுக்குள் சென்றார். சந்திரனை பார்த்தார்.
“தம்பி நீ அந்த ரூம்பிலே போய் தங்கிகோய்யா” என்றார்.
காரை நிறுத்தி விட்டு, பம்பு செட்டில் நன்றாக குளித்தான்.
இது நிரந்தரம் இல்லாத குளியல். பொய் குளியல். இந்த பம்பு செட்டுக்கும் நமக்கும் என்ன உறவு இருக்கு. அடுத்தாப்புல ஒரு பிரச்சனை வந்தா இங்கிருந்து விரட்டுவாவ.
சந்திரனின் உடல் சூடுஆறியது.ஆனால் மனது சூடு ஆறவில்லை.
எதுக்கு ஆசை வைக்கணும். இந்த இடத்து மேலே ஏன் ஆசை வைக்கணும்.
அவன் மனது போராடியது. ஆனால் உள் மனம் முத்துகிளி வீட்டில் இருந்து உன்னை பார்ப்பாள் என்பது போல கூறியது. வீட்டை எட்டி எட்டி பார்த்தான் சிறிய அசைவு கூட இல்லை.
அத்தைக்கு ஆறுதல் கூறிட்டு அங்கேயே இருப்பாள்.
ஆனால் எதையும் கண்டு கொள்ளவில்லை.
வீட்டுக்குள் நுழைந்தான். அங்கே சிறுவன் நின்றுகொண்டிருந்தான். “என்ன பம்பாய் கார அண்ணாச்சி திரும்பி வந்திட்டியளா?”
“ஆமாப்பா. வந்துட்டேன்” விரக்தியாக சொன்னான்.
போன மச்சான் திரும்பி வந்தான் கோமனத்ததோட” என சிரித்தான்.
“என்னடா?”
“பின்னே என்ன கோமனத்தோட படுக்க போறியளாக்கும். துணி மணி கொண்டு வந்திருக்க மாட்டியளே. அதான் அய்யா அவிய வேஷ்டி சட்டை கொடுத்து விட்டுருக்காவ. நீங்க உடுத்துருக்க துணியை காயப்போட்டுட்டு இதை கட்டிகோங்க அண்ணாச்சி”.
கையில் வாங்கினான் சந்திரன்.
“கொஞ்சம் இருங்க இப்ப வாறேன்”.
சிட்டாக பாய்ந்தான் அந்த பையன்.
“வேஷ்டியை கட்ட தந்த அய்யா, பொண்ணை கட்டிதர மாட்டாவளா?” மனம் ஏங்கியது.
சிறிது நேரத்தில் சாப்பாடு வந்தது.
“அண்ணாச்சி, மாமா செத்து போயிட்டாவளா அதான் முத்துகிளி அக்கா வருத்தமா இருக்காவ. ஆனாலும் நீங்க பட்டினியா கிடக்க கூடாதுன்னு உப்புமா கிண்டி கடுங்காப்பி போட்டு கொடுத்து விட்டுருக்காவ”. என்றான்.
உம்புமாவையும் கடுங்காப்பியையும் டேபிளில் வைத்தான்.
அமர்ந்தான்.
சாப்பிட மனம் இல்லை. அப்படியே அமர்ந்தான்.
“அண்ணாச்சியோ, டிவியும் இல்லை. எப்போதும் போனை பாத்துக்கிட்டு இருந்தா கண்ணு கெட்டு போவும். இன்னாங்க. எங்க ஊரு வாசக சாலையில இருந்து ஒரு புத்தகம் எடுத்துட்டு வந்துருக்கேன். எனக்கு சரியா படிக்க தெரியாது. என்னவோ பனையண்ணன் அப்படின்னு அட்டையில போட்டு இருந்தாவ. பனையே எவ்வளவு உசரம். பனைக்கு அண்ணன் அதை விட உசரமாக இல்லை இருப்பாவ”. சிரித்தான் பையன்.
அந்த புத்தகத்தனை கையில் வாங்கினார்.
மறைந்த முதுபெரும் எழுத்தாளர் ஜேக்கப் அய்யா புத்தகம் இது. ஒரு காலத்தில் பனையேறிகளுக்கு என்று மதிப்பு இருந்தது. தனது பணையண்ணன் நாவலில் எழுதியிருப்பார். அந்த நாவல் தான் அது.
பக்கத்தனை எடுத்து புரட்டினான்.
அந்த கதை விரிந்து சென்றது.
“அண்ணாச்சியோ கதை படிக்கது இருக்கட்டும். நீங்க முதலுல சாப்பிடுங்க”.
“சரிப்பா. நீ. போ. நான் பாத்துக்குறேன்”.
நாவலை பார்த்தான் சந்திரன். நாடார் கதைபோலவே இருந்தது. அதனால் அவனுக்கு அந்த நாவல் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்.
அவருடைய கதாநாயகன் காளிக்கு சொந்த ஊர் முத்தாலங்குறிச்சி. அவர் கூறியிருப்பது போலேவே கதையை எழுதியிருந்தார்.
அந்த நினைவுதான் படிக்க படிக்க சந்திரன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது எனக்கு வயது பதினெழு இருக்கும் பாளை அருவாளோடு பிறந்தவன் என்பார்கள். பள்ளியில் படிக்கும் போதே பனை ஏறிட்டேன். பனைத்தெழிலில் சுவையோடு ஈடுபாடு கொண்டேன் . பாளையங்கோட்டை பக்கம் தாமிரபரணி ஆற்றங்கரையில் முத்தாலங்குறிச்சிதான் நான் பிறந்த ஊர். ஊரைச் சுற்றி ஆயிரங்கால் மரங்கள் போன்று பனைகள் நெருங்கி நீண்டு நிமிர்நது நிற்கும். முப்பது வீடுகள் பனை ஏறிக் குடும்பங்கள். மூன்று வீட்டுக்காரர்கள் நாட்டாமை. எட்டு வரை படிச்சேன். படிப்பு நல்லா வந்தது. ஆனாலும் பனை ஏறுவது எனக்குக் கைவந்த கலையாயிற்று.
அந்த ஊரில் அழகுள்ள பெண் வள்ளி. ஐயாமார் மடத்தில் படித்தவள். அவள் நல்ல வளர்த்தி, நான் கட்டை. இருவருக்கும் சம வயது . அவள் மீது எனக்குக் காதல். ஊமைக்காதலாக ஓராண்டு கடந்தது. குருத்தோலை போன்று எங்கள் காதல் மாசு மறுவற்று வளர்ந்தது.
அவள் வீட்டில 12 பிள்ளைகள். எங்கள் வீட்டில் பதினொரு பிள்ளைகள். முறைப்படி பெண் கேட்டுப் போனோம். வள்ளியின் தந்தை பனைத் தொழிலில் பலே கில்லாடி. முரட்டுப் பாளையையும் இடுக்கியால் இடுக்கி கூர்மையான அருவாளால் பாளையை மென்மையாகச் சீவிச்சீவி பதனீர் கறந்து விடுவார். ஒரே பனையில பத்துக்கலயம் கட்டி, பத்துப் பக்கா பதனீரை ஒரு குடுவை நிறைய ஒரு சொட்டு சிந்தாமல் பனையிலிருந்து கீழே கொண்டு வருவார். குடிபதனீருக்குக் காசு வாங்காமல் தாராளமாகக் கொடுப்பார்.
“காளி எந்த நேரமும் புத்தகம் படிக்கிறான். பேப்பர் படிக்கிறான். பேனாவும் பென்சிலுமாகத் திரியுறான். படிப்பில் ஆர்வமுள்ளவன். பனை எங்க ஏறுவான் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணிக்குள் 50 பனைகள் ஏறி அடிமட்டையைத் தொட்டு இறங்க வேண்டும். இந்தச் சவாலை ஏற்றால் வள்ளியைக் கட்டிக்கொடுப்பேன்” என்றார் பெண்ணின் தந்தை.
ஊர்ப்பஞ்சாயத்து ஏற்றுக்கொண்டது நானும் பெருமையாக ஒப்புக் கொண்டேன். போட்டியில் வென்றேன். அரை மணி நேரத்துக்கு முன்பே ஏறி முடித்தேன்.
ஊரே ஆரவாரித்தது. ஆவணியில திருமணம் என்று ஓலை எழுதினார்கள. ஓலையில் எழுதும் ஏட்டெழுத்து போய் நூறாண்டுகளுக்கு மேல ஆகியும் இன்னும் ஓலை கூறுதல் என்ற சொல் தான் வழக்கில் இருக்கிறது. பனையின் பெரும் அவ்வளவு பெரிது. பனைகளே அழிந்து போனாலும் அந்த மங்கலச் சொல் அழியாது.
ஆவணிக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிற படியால் காதல் புளித்து விடக்கூடாது என்று பயந்து என் இரு நண்பர்களோடு சேர்ந்து இரகசியமாகக் கொழும்புக்குச் சென்று விட்டேன்.
கொழும்பில் நான் சுற்றாத பூமியில்லை. தென்னையில் தேங்காய் பறிக்க ரொம்ப கிராக்கி இருந்தது. நல்ல பணம் கிடைத்தது. ஆராய்ச்சி கடடுவ என்ற இடத்தில் குடிசை போட்டுத் தங்கி இருந்தேன். சிங்களம் நன்கு பேசக் கற்றுக்கொண்டேன். பிற்பகல் முழுவதும் படிப்பதிலும் அறிவைச் சேகரிப்பதிலும் அலைந்தேன். கல்வி கேள்விகளில் நாட்டம் கொண்டேன்.
தொழில் தெரிந்தவனும், ஒழுக்கமாக இருப்பவனும் எங்கு வளமாக வாழலாம். எத்தனை வருடங்கள் ஆனாலும் காளியைத்தான் திருமணம் செய்வேன் என்று வள்ளி உறுதியாகச் சொல்லி விட்டதை அறிந்து மகிழ்ந்தேன்.
ஓர் ஆண்டு கழித்து இந்தியா வந்தேன். இருபது வயதில திருமணம் சிறப்பாக நடந்தது. ஒரே மகிழ்ச்சி. பனைத்தொழிலை விட்டு விடும் படி வள்ளி சொன்னாள். பனை ஏறுவது எனக்கு ஊஞ்சல் ஆடுவது போன்று இன்பமாக இருந்தது.
எங்கள் இருவர் குடும்பங்களிலும் பிள்ளைச்செல்வங்கள் ஏராளம். அனைவரும் பனைத் தொழிலில் சமர்த்தவர்கள். தேன் போன்ற பதனீரை இறக்கிச் சாப்பிடக்கொடுப்பதை எம் ஆன்றோர் சமூகத் தொண்டாகவே செய்தார்கள். விண்முட்டிப் புகழ் பெற்ற சான்றோர் என அழைக்கப்பட்டனர். உண்டி கொடுத்து தானே உயர்ந்தோம். பதனீரும் நல்ல உணவுப் பண்டம் தானே.
ஐந்து ஆண்டுகளாகியும் எங்களுக்குப் பிள்ளை இல்லை. இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் படி வள்ளி என்னைக் கட்டாயப்படுத்தினாள். எனக்குப் பிரியமே இல்லை. குடும்பத்தினரின் வற்புறத்தலால் சம்மதித்தேன்.
உள்ளூரிலே வள்ளியே ஒரு பெண்ணைக் கண்டு பிடித்துக் காட்டினாள். அவள் பெயர் குருத்து. கீழத் தெரு. அவள் குடும்பமும் பிள்ளைக் குட்டிகள் நிறைந்த குடும்பமாகும்.
குருத்து வீட்டில் மூறைப்படி பெண் கேட்ட போது என் ஒரு பிள்ளையாவது பனை ஏறாதவனுக்கு கட்டிக்கொடுக்கப்போறேன் என்று சொல்லி மறுத்து விட்டார். தகப்பனார்.
பனை ஏறுகிறவனுக்குப் பெண் தர முடியாது என்ற சொல் காளிக்கு வீறாப்பை மூட்டியது.
குருதையே கட்டுவேன் என்று காளி வஞ்சினம் கூறினார். நெருக்கிப்பிடித்துப் பெண் கேட்ட போது குருத்தின் மூத்த சகோதர்களில் ஒருவர் நம்ம ஊர் வட்டப்பனையில் நான்கு பனைகளில் மேலே இருந்தவாறே தொத்தித் தாவ வேண்டும் அப்படியானால் என் தங்கையைக் கட்டித் தருகிறேன் என்று சூளுரைத்தார்.
நான் அதை ஏற்று குறிப்பிட்ட நாளில மாபெரும் சாதனையாகச் செய்து காட்டினேன்.
குருத்தின் சகோதர்களுக்குள் ஏற்டட குழப்பங்களினால் திருமண நாள் தடைப்பட்டது.
பனை ஏறினால் இழி சாதியாம் சும்மா சுற்றி திரிந்தால் மேல சாதியாம். இதை எப்படியாவது ஒழிக்கணும் என்று மார்பு தட் டிக் கூறிக்கொண்டேன்.
மறுநாள் அதிகாலை மூன்று மணி குருத்தைக்கூட்டிக்கொண்டு ரயிலில் பம்பாய்க்குப் பயணம் செய்தேன். பம்பாய் தாராவியில் நிறைய நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.
அங்கு விஷம் கலந்து விஷச்சாராய விற்பனையைக் கண்டு மனம் மடிந்தேன். சுத்தமான தென்னங்கள்ளையும் பனை பதனீரையும் இறக்கிக் காட்டினேன். அதன் ஆரோக்கியம் கண்டு மகிழ்ச்சியில் ஆடிப்போனார்கள். ஆயினும் கடினமாக உழைத்து பனை ஏற யாரும் தயாராக இல்லை.
ஆறுமாதங்கள் அங்கிருந்தோம்.
அதன் பின் ஊருக்கு கிளம்பினோம்.
அங்கிருந்த எங்களை வழியனுப்ப வந்தவர்கள் அழுதார்கள். பனை ஏற்றுத் தொழிலை விட்டு விடுங்க. கேவலாம இருக்கு பம்பாயில நன்றாகப் பிளைக்கலாம். போய் வள்ளி¬யும் கூட்டி வாருங்கள் என்றார்கள். நான் மறுத்துவிடடேன். நாடு விட்டு நாடு புலம் பெயர்வதில் எனக்கு நாட்டமிலலை.
ஊருக்கு வந்தேன்.
ஊரில் எனக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
படித்துக்கொண்டு இருககும் போதே சந்திரனுக்கு தூக்கம் வந்தது.
ஆனால் பனை தொழிலாளிகள் நிலை அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது.
பனை தொழில் கொஞ்சம் கொஞ்சமாக பாழ் பட்டு போனது. முத்தாலங்குறிச்சியில் ஒரே நேரத்தில் மூச்சி விடாமல் 50 பனை ஏறினான் காளி, முதல் பெண்ணை கட்டினான். இரண்டாவது பெண்ணை கட்ட மரத்தோட கிளைக்கு கிளை தாவினான். பனையேறினால் பெண் கிடையாது என்று கூற ஆரம்பித்தனர். இன்று அந்த ஊரில் பனை மரம் இல்லை. மருந்துக்கு அங்கே இங்கே மட்டுமே நிற்கிறது.
இந்த பூமியில் எத்தனை இனம். அதிலும் பனை ஏறும் இந்த இனத்துக்குத்தான் எவ்வளவு கஷ்டம்.
எல்லா தொழிலிலும் கலப்படம் செய்தாத்தான் தப்பு. இங்கே கலப்படம் செய்யாட்டி தப்பு.
சுண்ணாம்பை பதனீருல கலப்படம் செய்யாட்டி அது கள்ளுபதனீர். போதை பொருள் ஆகி விடும். மது விலக்கு காலத்தில் கள்ளு குடித்தால் தண்டனை.
ஆகா. என்னடா நாடார்கள் வாழ்க்கை
வாழ்க்கையிலேயே அர்த்தம் உள்ள வம்சம் இந்த வம்சம். உயிர் காக்க உழைச்ச வம்சம். பனை தொழில் இருந்து பல்வேறு மருததுவ குணங்களை உலகத்துக்கு தந்த வம்சம்.
இப்போ தொழிலை இழந்து, அதன் பழமையை இழந்து தவிக்குது.
அப்படியே தூங்கி போயிட்டான்.
காலையில் எழுந்தான்.
யாருமே எதிர்பார்க்காத பெரிய பிரச்சனை காத்துக்கொண்டிருந்தது.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)


