மலேசியா வாசுதேவன் (Malaysia Vasudevan, 15 சூன் 1944 – 20 பெப்ரவரி 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் 8000 இற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்.
இவர் கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் – அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்.
மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த “இரத்தப் பேய்” என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் “பாவலர் பிரதர்ஸ்” குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.


