தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 என கண்டறியப்பட்டுள்ளது.
“தண் பொருநைÕÕ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதை கடந்த 08/0-9-/2021 அன்று சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பண்டை தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022-ம் ஆண்டில் புதிதாக 7 இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.
அதாவது, சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்கள் (எட்டாம் கட்டம்). தூத்துக்குடி மாவட்டம் சிவகளை (மூன்றாம் கட்டம்). அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் (இரண்டாம் கட்டம்). கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை (இரண்டாம் கட்டம்).
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை (முதல் கட்டம்). திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி (முதல் கட்டம்). தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை (முதல் கட்டம்). மேலும், “திரைகடலோடியும் திரவியம் தேடல்ÕÕ என்ற முதுமொழிக்கேற்ப, பண்டைய தமிழ் சமூகம் நாட்டின் பிறபகுதிகளோடும், வெளிநாடுகளுடனும் வணிக தொடர்பு கொண்டிருந்த சங்ககால துறைமுகங்களான பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகியவை முக்கிய பங்காற்றின.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தன்பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடற்கரையோர முன்கள புலஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
முதற் கட்டமாக, சங்ககால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினை கண்டறிய கடலோரங்களில் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி நிதியில் அகழாய்வுகள், களஆய்வுகள் மற்றும் சங்க கால கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்கள புல ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு இந்த அகழாய்வுகளும், முன்கள புலஆய்வு பணிகளின் முடிவுகளும் உறுதி செய்யும் என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து எழுத்தாளரும் தொல்லியல் ஆர்வலருமான முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, இந்த காலம் தொல்லியல் துறைக்கு பொற்காலம். எனவே தான் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் மத்திய மாநில அரசு மூலமாக நமக்கு கிடைத்து வருகிறது. கடந்த வருடம் நெல்லை பண்பாட்டை பரிணாமிக்கும் விதமாக பொருநை அருங்காட்சியம் அமைக்க 15 கோடி ரூபாய் பணம் ஒதுககீடு செய்து அதற்கான இடத்தினை நெல்லை மாவட்டம் ரெட்டியார் பட்டி மலையில் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த பணியை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்துள்ளார். இதற்கிடையில் இந்த ஆண்டு முதலமைச்சர் 7 இடங்களில் அகழாய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இது என்னை போன்ற தொல்லியல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் நம்பியாற்றன் கரை துலுக்கர் பட்டி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தொடர்ந்து அகழாய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி தருகிறது. 2500 வருடங்களுக்கு முந்தைய கொற்கை துறைமுகத்தினை பொறுத்தவரை நமக்கு மிகப்பெரிய தேடல் இருந்து வந்தது. எனவே துறைமுக தேடலை இந்த ஆண்டு தமிழக அரசு செய்து இருப்பது சந்தோஷத்தினை கொடுக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடந்த இரண்ட கட்ட அகழாய்வு அறிக்கையும், கொற்கையில் மாநில அரசு சார்பில் நடந்த முதல் கட்ட ஆய்வும் அறிக்கையும் மிகவிரைவில் வெளி வரவேண்டும். முழுமையான அறிக்கை வெளிவந்தால் மேலும் தமிழனின் புகழ் உலக அளவில் பிரபலமாகும் என்பதில் எந்தவொரு அய்யமும் இல்லை. அதை தமிழக முதல்வர் செய்து முடிக்கும்போது உலகத்தில் மிக முக்கிய இடத்தினை தமிழகம் முடிக்கும் என்பதில் எந்த அய்யப்பாடும் இல்லை.
என்று அவர் கூறினார்.
&&&