“பராவயில்லை ஆச்சி இப்போல்லாம் ராத்திரி பகலுன்னு பாராம கதை சொல்ல ஆரம்பிச்சிட்டா. அதுவும் விதவிதமாக சொல்லுதா நல்ல £ இருக்கு” என ரசித்தான் ராசுக்குட்டி.
“ஆச்சி. ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டு -குலுக்கைகுள்ள ஒளிஞ்ச கதையை சொல்லு”. ஆச்சியின் சேலையை பிடித்துக்கொண்டு உதறியபடி கேட்டான்.
ஆச்சி சிரித்தாள். “ம். என் செல்லத்துக்கு அவசரத்தை பாரு அவசரத்தை”. கன்னத்தை கிள்ளி விட்டாள்.
“நீ. சொல்ற மாதிரியும் இந்த பல மொழி கதையை சொல்லுவாக. ஆனால் நான் சொல்ற கதை வித்தியாசமா இருக்கும். என் செல்லுத்துக்காக சொல்லுதேன் கேளு”.
ராசுக்குட்டி அமைதியாக அமர்ந்து கதையை கேட்க ஆரம்பித்தான்.
“ஒரு ஊருல ஒரு சோசியன் இருந்தானாம். அவனுக்கு பின்னால நடக்கப்போற விசயமெல்லாம் முன் கூடடியே தெரிஞ்சுடுமாம்”. ஆச்சி சொல்ல ஆரம்பித்த உடனே சுவராஸ்யம் ஒட்டிக்கொண்டது.
“ஹாய் நல்லா இருக்கே அப்ப அவனுக்கு நல்லது நடந்தாலும் தெரியும். கெட்டது நடந்தாலும் தெரியும். அதுக்கு தக்கனி அவன் தன்னை மாத்திக்கலாமே”. ஆச்சரியத்துடன் கன்னத்தில் கை வைத்தப்படி ரசித்தான்.
ராசுக்குட்டியை பார்த்து முறைத்தாள் ஆச்சி. “இப்ப நான் கதை சொல்லணுமா? வேண்டமா?”.
“சொல்லு ஆச்சி”.
“பொறவு எதுக்கு நீ முந்திரி கொட்டை மாறி முந்துத்துத”.
“இல்லை ஆச்சி. நான் வாயை பொத்திகிடுதேன். நீ சொல்லு ஆச்சி”. ராசுக்குட்டி அமைதியானான்.
“அந்த சோசியன் ஒரு நாள் தனது சாதகத்தை பாத்து இருக்கான். அவனுக்கு ஏழரை சனி பிடிச்சி இருக்கு. பயந்தே போயிட்டான். நமக்கு ஏழரை சனி பிடிச்சு இருக்கே . இந்த கட்டத்தில நாம இருந்தா ஜெயிலுக்குள்ளே இல்லைபோகணும். அதனால இதுல இருந்து எப்படியும் தப்பிக்கணுமுன்னு முடிவு செஞ்சான்”.
“ம்”. கொட்டினான் ராசுக்குட்டி. ஆச்சி தொடர்ந்தாள்.
இதுக்காக ஒரு திட்டம் போட்டான். ஒரு நாளு அவன் பெண்டாட்டிக்கிட்டே வந்தான். “அடியே என் அசடு பொண்டாட்டி. உள்ளூருல என் பப்பு வேகலை. வருமானமும் இல்லை. நான் கொஞ்ச நாளைக்கு வெளியூருக்கு போயிட்டு வாரேன்னு” சொல்லி வழியனுப்பி இருக்கான்.
அவ வீட்டுக்காரியும். “மச்சான் ஊரை விட்டு போயி நீர் என்னத்தை சம்பாத்தியம் பண்ண போறீரு. பேசமா இங்கேயே கெடயும். ஜோசியம் பலிகாட்டாலும் உம்மை நான் மாடு மேச்சி காப்பாத்துறேன்னு” சொல்லியிருக்கா.
“அடி அசடே. நான் என்ன கேப்பமாரின்னு நினைச்சிய்யா. பொம்பளை கையால சாப்பிட. நான் ஆம்பிளைடி. வெளியூர் போய் ஏதாவது சம்பாத்தியம் பண்ணிட்டு வந்திருறேன்னு” கிளம்பியிருக்கான்.
பெண்டாட்டியும் அவனுக்கு கெட்டுசோறு கட்டி அனுப்பி வைச்சிருக்கா.
இவன் சோறை வாங்கிட்டு போனவன். அங்க இங்க நின்னுட்டு சோத்தை தின்னுபுட்டு மூஞ்சி கருகலுல வீட்டுக்கு திரும்பவும் வந்து இருக்கான். பொண்டாட்டி பரக்க பாத்துக்கிட்டு இருக்க நேரத்தில வீட்டுக்குள்ளே போய் குலுக்கை ஒண்ணுக்குள்ள ஒளிஞ்சி உட்காந்துக்கிட்டான்.
குலுக்கை தெரியுமுல்லா. நாம சோத்துக்கு நெல்லை சேத்து வைச்சிருப்போன் பாரு . அது தான் குலுக்கை.
கதையை கேட்ட ராசுக்குட்டி யோசித்தான். குலுக்கைகுள்ளே எப்படி உட்கார முடியும். ஆனால் ஆச்சி தொடர்ந்தாள்.
அந்த பயல் பெண்டாட்டி இல்லாத நேரத்தில வெளிய வந்துட்டு, இருக்கிறத பொறுக்கி தின்னுபுட்டு திரும்பவும் உள்ளே போயிருவான்.
அவன் என்ன நினைச்சான்னா. நாம வெளியே போனத்தானா வம்பு வரும். நம்ம தான் குலுக்கைகுள்ள இருக்கோமே. எதுக்கு வம்பு வரப்போவுதுன்னு நினைச்சான்.
ஆனா விதி அதான் அந்த ஏழரை சனி யாரை விட்டுச்சு.
ஒரு நாள் காலையில் 5 மணிக்கு அந்த ஊருக்காரி ராமாயி ஆத்துக்கு போயிருக்கா. அப்போ எவனோ களவாணி பய அவன் கழுத்து ஜெயினை அத்துக்கிட்டு புடுங்கிட்டான். அவ ஆ. ஊன்னு கத்தி ஊரைக் கூட்டிட்டா.
எல்லோரும் வந்து ஏம் புள்ள ராமாயி உன் ஜெயினை அறுத்தவன் யாரு. தெரியுமா? புள்ளே தெரிஞ்சா சொல்லு அவனை கட்டி வைச்சி தோலை உரிஞ்சி புடுவோன்னு சொன்னாவ.
நட்டாமை வந்தாரு, “ஏம் புள்ளை கண்டதை உள்ளபடி சொல்லி புடு. அம்புடுத்தான் சொல்லுவேன். வெளியூருகாரனுவ இங்க களவாங்க வரமாட்டான். எவானச்சும் உள்ளுர் பயலுவளாத்தான் இருக்கும். அவனுவல சும்மா விடக்கூடாது” என்றார். உண்மைதானே அதிகாலையில வெளியூரு பயலுவ இங்க எதுக்கு வரப்போறானுவ.
ராமாயி அழுத்தாள். அழு¬க்கு கிடையில மெதுவா சொன்னா “நாட்டாமை அய்யா அது வேற யாரும் இல்லை. சோசியருதான். இருட்டுல அவன் முகத்தை பாத்தேன். துண்டு போட்டு முடியிருந்தான். ஆனா முகம் தெரியலை. ஆனா ஆளு நிறம்,, நடை எல்லாதையும் வச்சி பாக்கும் போது அவன் சோசியன் தான்”. என்றாள்.
உடனே நட்டாமை தலைமையில ஊருக்கூட்டம் சோசியர் வீட்டுக்கு போச்சு.
சோசியர் பெண்டாடட்டிககிட்டே “ஏ புள்ளே இங்க பாரு. உம் புருசனை வெளியே வரச்சொல்லு. ஜெயினை தரச்சொல்லு. அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன். ஊரு கட்டுப்பாட்டுக்குள்ள வரலைன்னா அதுக்கப்புறம் அப்படித்தான்”. என்றார் நாட்டாமை.
“யோவ் நாட்டாமை என்ன மறை கழன்று போய் அலையிறீறா. எம் புருசன் பட்டணத்துக்கு போய் 1 வாரம் ஆச்சி. சும்மா என் வீட்டில வந்து முட்டிக்கிட்டு நிக்காதேயும். நாங்க ஒண்ணும் களவாணி குடும்பம் இல்லை நாட்டாமை” என்றாள்.
நாட்டாமை, “ராமாயி இல்லை. இவன் புருஷன் தான் எனக்கு நல்லா தெரியும்முன்னு சொன்னா”.
“ஏலா கழுதை முண்டை கூறுகெட்டசெறுக்கி அவளா சொன்னா, நான் சொல்லி கிட்டே இருக்கேன் அவ பாத்த மாறி சொல்லுதா எம் புருசன் வீட்டுக்குள்ளத்தான் இருக்கான். வந்து தேடி பாரும் நாட்டாமை” என்றாள்.
நாட்டாமைக்கு ஒன்றும் ஓட வில்லை.
ஏன்னா இவன் கிட்டே சொல்லிட்டுத்தான் சோசியன் பட்டணமே போனான். அவன் பஸ் ஏறுனதை இவரு கண்ணால பாத்தவரு.
உடனே சொன்னார், “யய்யா நான் அவன் பட்டணத்துக்கு போனதை என் கண்ணால பாத்தேன். இவ முன் இருட்டுல பாத்ததை தப்பா சொல்லுதா. வாங்க போவும்” என்றார்.
“இங்க பாரும் நட்டாமை இவ எங்கேயோ ஒளிச்சி வைச்சிட்டு பேசுதா? இவளை நம்பி நீங்க போவதீய. வீடடுக்குள்ளே போய் தேடுங்க” என்றாள் ராமாயி.
அவ்வளவு தான் சோசியர் பெண்டாட்டிக்கு கோபம் வந்துச்சு-. “வாங்க உள்ளே போய் தேடுங்க. அந்த மச்சியில போய் தேடுங்க” என்றாள் கோபமாக.
நாட்டாமையும் இரண்டு பேரை அனுப்பி தேடினாவ. அங்க யாரையும் காணோம்.
போனவிய யாரும் இல்லைன்னு திரும்பி வந்துட்டுவா?.
சோசியர் பெண்டாட்டிக்கு கோபம் வந்தது. சும்மா மணலை வருத்துககிட்டு சண்டைககு வந்துட்டா.
ஆச்சி சொன்னது முதலுல ராசுக்குட்டிக்கு புரியலை. ஆனாலும் கதை முடியட்டுமுன்னு விட்டுட்டு£ன். ஆச்சி தொடர்ந்தார்.
நம்ம புருசன் மேலே பலியை போட்டுட்டாவன்னு. இவனுவ கிட்டே நாம தலைகுனிஞ்சி நிக்க கூடாதுன்னு, கோபத்தில வீட்டு மூலையில தன்னோட தகப்பன் தங்கசாமி வேட்டைக்கு போவ வச்சிருந்த வேல் கம்பை எடுத்தாள். பக்கத்தில ஒரு ஆள் உயர இருந்த குலுக்கை ஒரு குத்து குத்துனா.
அவ்வளவு தான் குலுக்கை இரண்டா பிளந்து விழுந்தது. இப்போ பாருங்கவே. எம் புருசன் உள்ளதான் இருக்கான் என்றால். என்ன ஆச்சிரியம்.
உள்ளே அவ புருசன் சோசியன் பக்கரபரபரன்னு முழிச்சிக்கிட்டு இருந்தான்.
எல்லாரும் அவனை இழுத்து போட்டு நொத்து நொத்துன்னு நொத்தி புட்டாவ.
சோசியர் பெண்டாட்டி அசந்தே போயிட்டா. “பாவி மனுசா. ராக்காயி நகையை பறிச்சி எந்த கூத்தியா விட்டுல கொடுத்துட்டு எவ்வீட்டு குலுக்கையில வந்து ஒளிஞ்சி சிடக்கன்னு அந்த வேல்கம்பால ஜோசியனை சாத்து சாத்துன்னு சாத்தினா.
“அடியே எனக்கு ஏழரை சனிடி. அதுக்கிட்டு இருந்து காப்பாத்துததுக்குத்தான் இப்படி ஒளிஞ்சி இருந்தேன்னு அவன் கத்தியும் யாரும் கேட்கல.
சனி பிடிச்சா எங்க ஒளிஞ்சாலும் விடாது. ஆமாம். அதை தான் ஒளியத்தெரியாதவன் தன் வீட்டு குலுக்கைகுள்ள ஒளிஞ்சான்னு ஒரு கதை சொல்லுவாவ” என்று சொல்லி முடித்தாள் ஆச்சி.
அப்போ தலையாரி வீட்டுல ஒளிஞ்சான்னு சொல்லுதாவளே அதுக்கு அர்த்தம் என்ன ஆச்சி. ராசு குட்டி கேட்டான்.
“அது ஒண்ணும் இல்லைடே. குத்தம் செய்யறவியள அந்த காலத்தில தலையாரித்தான் போலிசில பிடிச்சு கொடுப்பாவ. ஒளிஞ்சு ஓடுற களவாணி பயலுவ தலையாரி வீட்டுல ஒளிஞ்சா அவுகள காப்பாத்தியா கொடுப்பாவ. போலிசில தானே காட்டி கொடுப்பாவ. அப்படித்தான் தலையாரி வீட்டில ஒளிஞ்சா என்ன ஆவும்”.
பொக்கை வாயை காட்டி சிரித்தாள் பாட்டி.
“அது தான் ஒளியத்தெரியாதவன் தலையாரி வீட்டுல ஒளிஞ்சான்னு பழமொழி சொல்லுவாவ”.
மீண்டும் அதே பொக்கை வாய் சிரிப்பு.
“சரி சோசியன் பொண்டாட்டி மணலை வறுத்துக்கிட்டு சண்டைக்கு வருவான்னு சொன்னீயே ஆச்சி. அதுக்கு என்ன அர்த்தம்”.
“ம். இதுக்கும் ஒரு கதை இருக்கு”. ஆச்சி சிரித்தாள்.
“அப்படியா?”
“ஆமாம் அந்த கதையை இனனைக்கு ராத்திரிக்கு சொல்லுதேன்”.
ஆச்சி எழுந்து மாட்டை அவிழ்த்துக்கொண்டு வயற்காட்டு செல்ல ஆயத்தமானாள்.
ராசுக்குட்டியும் ஏமாற்றத்துடன் பள்ளிக்கு செல்ல தயாரானான்.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)