திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘பிரேக் தரிசனம்‘ செயல்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கடந்த மாதம் 25-ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கோயில் விழா நாள்கள் தவிர்த்து, பிற நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு மணி நேரம் ‘நிறுத்த தரிசனம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கு கட்டணம் ரூ. 500 எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது பக்தர்களின் மத உரிமையைப் பறிப்பதோடு, நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். ஆகவே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், கடந்த 11-ஆம் தேதி வரை இதுதொடர்பான ஆட்சேபங்களைத் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டது. ஆனால், மனுதாரர் அதற்கு முன்பாகவே வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை குறித்து பக்தர்கள் ஆட்சேபங்கள் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டது. ஆகவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், பக்தர்கள் வழங்கும் ஆட்சேபங்களை கோயில் நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


