திருநெல்வேலி – திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது பணிகள் நிறைவடைந்து விட்டது.
இதற்காக இந்த ரயில்பாதையில் ஆறுமுகநேரியில் ஒரு துணை மின் நிலையமும், பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் ஆகிய பகுதிகளில் 4 உபமின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணை மற்றும் உபமின் நிலையங்களில் இருந்து 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மூலம் இந்த மின்சார ரயில்சேவை தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இந்த புதிய மின்மய ரயில் பாதையை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா இன்றைய தினம் ஆய்வு செய்ய வருகை தந்தார். முன்பக்கத்தில் டீசல் எஞ்சினையும், பின் பக்கத்தில் மின்சார எஞ்சினையும் பொறுத்திய 6 பெட்டிகள் கொண்ட ரயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்தது. இதில் ரயில்வே பொறியாளர்கள், பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் உடன் வந்தனர்.
அதன்பின்னர் மதியம் 3 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி முதல் முறையாக மின்சார எஞ்சின் பொறுத்திய ரயில் கிளம்பியது. ரயிலின் முன்பக்கத்தில் பலூன் மற்றும் மாலைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை தாண்டி 70 கிலோ மீட்டர் வேகத்தில் தாண்டி சென்ற காட்சி மிகவும் அழகாக இருந்தது.
அதன்பின்னர் ரயில் திருநெல்வேலியை சென்றடைந்தது. இன்னும் இரண்டு வார காலத்திற்குள் திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் பாதையில் மின்சார எஞ்சின் பொறுத்திய ரயில்சேவை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


