நவதிருப்பதி 6வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் இன்று ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
நவதிருப்பதி தலங்களில் 8-வது தலமானதும், செவ்வாய் தலமும், நிதியை இழந்த குபேரனுக்கு அவனிழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, பின்னர் குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள் பாலித்த தலமாகவும் திருக்கோளூர் வைத்த மாநிதி பெருமாள் கோவில் விளங்கி வருகிறது. இங்கு வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலமும் ஆகும்.
இந்நிலையில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி பெருந்திரு விழா கடந்த 10-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தருளல், இரவு இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.
10 நாள் திருவிழாவான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளல், அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. திரளான பொது மக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோபாலா என கரகோசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். இன்று இரவு 6 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
11-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேரோட்டம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, இளநிலை பணியாளர் பெருமாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


