தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழ நாட்டார்குளத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் அரியகுளத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில், திருப்பதிக்கும் வசந்தாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை கணவன் திருப்பதி மீது வசந்தா ஊற்றி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த திருப்பதி, தனது மனைவி வசந்தா மீது செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதன் பின்னர் வசந்தா கணவரை விட்டு பிரிந்து சென்னையில் இருந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் இருந்து திரும்பிய வசந்தா, நேற்று மாலை 4 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் பெட்ரோல் நிரப்பிய கேனை தனது பையில் வைத்தபடி சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இரவில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு வந்த வசந்தா கையில் வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் வேமாக வந்து அவர் மீது இருந்த தீயை அணைத்து ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வசந்தா கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தீ குளித்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


