தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தென்பண்டரிபுரம் என அழைக்கப்படும் விட்டிலாபுரத்தில் உள்ள பாண்டுரெங்கர் கோவிலில் இன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.
இதற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து பாண்டு ரெங்கருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு சிறப்பு யாகபூஜை நடந்தது. பின்னர் கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு பூவால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர், வீரவநல்லூர் குலசேகர ராமானுஜ ஜீயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். ஜீயர் சுவாமிகளை பூ தூவி பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிருஷ்ணன் ராதை புகைப்படத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அதன் முன்னர் பஜனை மூலம் ராதே ராதே பாடல்கள் பாடி 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பக்தர்கள் கும்மியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பெரியாழ்வார் திருமொழி பாராயணம், தச்சநல்லூர் ஆண்டாள் கோஷ்டி, பாளை கோபாலசுவாமி கோவில் பஜனை குழுவினரின் பஜனை வழிபாடு, நெல்லை சகஸ்வர நாம மண்டலி குழுவினரின் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வெளி மாவட்டங்கள், உள்ளூர் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


