தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், ராமசந்திரன், தலைமை காவலர்கள் பாலகிருஷ்ணன், இருதயராஜ், குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி பாலமுருகன் காபிரியேல் பேச்சி ராஜா ஆகியோர் லயன்ஸ் டவுனிலிருந்து ஊரணி ஒத்த வீடு செல்லும் சாலையில் உள்ள உப்பளத்து ஓடைபாலத்தில் (மச்சாது பாலம்) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இன்று அதிகாலை 4 மணியளவில் கண்டெய்னர் வாகனத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 43 மூட்டை பீடி இலை, கட்டிங் பீடி இலை, பீடி என சுமார் 1500 கிலோ ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் 50 இலட்சம் ஆகும். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு பைபர் படகுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த இனிகோ நகர் ரமேஷ் மகன் அருண்குமார் (34), காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோயில் தெரு முகமது காசிம் மகன் இர்சாத் கான் (21) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றபட்ட பீடி இலைகள் பைபர் படகுகள் மற்றும் கைதான 2பேர் சுங்கத்துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


