தூயதமிழ் ஊடக விருது பெறத் தகுதிவாய்ந்த, விருப்பமுள்ள ஊடக நிறுவனத்தார் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : அன்றாடம் மக்களின் வாழ்வியலுக்குத் தேவையான செய்திகளை முன்னறிந்து கொடுக்கும் செம்மாந்த பணிகளைச் சிறப்புடன் செய்துவருகின்ற காட்சி, அச்சு ஊடகங்கள் மொழிக்காப்பிலும் முகாமையான பங்காற்றுகின்றன. ஊடகமொழியே உலகமொழியாகிவிட்ட இன்றைய நிலையில், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் உதவியோடுதான் நல்ல தமிழ்ச்சொற்களையும் காலத்திற்கேற்ற புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் புழங்குமொழியாக்க முடியும்.
மொழிக்கலப்பைத் தவிர்த்தலே தமிழ்மொழியைக் காப்பதற்கும் வளப்படுத்துவதற்குமான அடிப்படையாகும். எனவே, தூயதமிழைப் பயன்படுத்தும் காட்சி ஊடகங்களையும், அச்சு ஊடகங்களையும் பாராட்டி ஊக்கமளிக்கும் வகையில், ‘தூய தமிழ் ஊடக விருதினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தூயதமிழ்ச் சொற்களையும், காலத்திற்கேற்ற புதிய கலைச்சொற்களையும் பயன்படுத்தி மக்களுக்குச் செய்திகளை வழங்கும் ஒரு காட்சி ஊடகத்தையும், ஓர் அச்சு ஊடகத்தையும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தேர்வுசெய்து, தமிழ் அகராதியியல் நாள் விழா’வின்போது ‘தூய தமிழ் ஊடக விருதும்’ பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ஓர் ஊடகத்திற்கு ரூ.50ஆயிரமும், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரைச் சான்றிதழும் வழங்கப்படும். காட்சி ஊடகப் பிரிவில் தொலைக்காட்சி ஊடகங்கள் மட்டுமே ஏற்கப்படும். அச்சு ஊடகப் பிரிவில் அரசு பதிவெண் பெற்று குறைந்தது 10 ஆண்டுகள் இடைநிறுத்தம் இல்லாமல் வெளிவரும் நாளிதழ், வார இதழ், மாத இதழ் ஆகியவை விண்ணப்பிக்கத் தகுதியானவைகளாகும்.
விருது பெறத் தகுதிவாய்ந்த, விருப்பமுள்ள ஊடக நிறுவனத்தார் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி தங்கள் நிறுவனம் தூயதமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் சான்றுகளை இணைத்து, 31.08.2021-ஆம் நாளுக்குள் oodagavirudu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதுடன், கீழ்க்கண்ட இயக்கக முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ 31.08.2021 மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.
இயக்கக முகவரி : இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028.


