தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், நீர்வழித்தடங்களான ஆறுகள், ஓடைகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளநீர் சீராக செல்வதற்கு ஏதுவாக மேற்கொள்ள வேண்டிய வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிரந்தர வெள்ளத்தடுப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள், பாலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, உதவி செயற்பொறியாளர் (சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை) ஜெபஸ்டின் பிரிட்டோராஜ், செயற்பொறியாளர்கள் வசந்தி (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக்கோட்டம்), மலர்விழி (வைப்பாறு வடிநிலக் கோட்டம்), கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை) ஆறுமுகநயினார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


