தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை ஊரின் மையப் பகுதியில் உள்ளது. இந்த அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த குக்கராமங்களுக்கும் தூத்துக்குடி திருநெல்வேலி திருச்செந்தூர், கோயம்புத்தூர் போன்ற வெளியூர்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து பணிமனையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் பயன்படாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட டயர்களை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் அங்கு மழைக்காலங்களில் நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் உள்ளே பயன்பாடற்ற டயர்களை அப்புறப்படுத்தப்படாததால் அங்கு விஷ பாம்புகள் அதிகம் நடமாடுவதாகவும் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் இன்று ஆறுமுகநேரி, பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாம்பாட்டிகள் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வரவழைக்கப்பட்டனர். பணிமனை வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பயன்பாடற்ற டயர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் பாம்பாட்டிகள் மகுடியை ஊதிய போது வெளியே வந்த பாம்புகளை பிடித்தனர். ஒரே நேரத்தில்நல்ல பாம்பு, கட்டுவிரியன் பாம்பு என 23 பாம்புகள் பிடிபட்டது. இதனை பார்த்த போக்குவரத்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மழைக்காலமும் வரும் நிலையில் பயன்பாடற்ற டயர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாகும்.


