வருவாய் கிராமத்தின் கணக்குகளை சரிபார்த்து பொதுமக்களின் குறைகள் சரிசெய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்தார்.
சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432-ம் வருவாய் பசலி வருவாய் தீர்வாயம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று கலந்துகொண்டு தெரிவித்ததாவது: ஒவ்வொரு வருடமும் தாலுகாவில் வருவாய் கிராமங்களில் உள்ள கணக்குகளை முடிக்கும் நிகழ்வே இந்த வருவாய் தீர்வாயம் ஆகும். ஒவ்வொரு வருவாய் கிராமத்தின் கணக்குகளை சரிபார்த்து அந்த வருவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சாத்தான்குளம் தாலுகாவில் என் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. சாத்தான்குளம் தாலுகாவில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இன்றைய தினம் 250 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மீதமுள்ள பட்டா, உதவித்தொகை கேட்ட மனுக்களுக்கும் தீர்வு காணப்படும்.
வருவாய் தீர்வாய பயனாளிகள் 99 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 14 பேருக்கு ரூ.1,50,645 மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் வரன்முறைப் பட்டா, 38 பேருக்கு ரூ.44,500 மதிப்பில் மாதாந்திர உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ரூ.67,500 மதிப்பில் 3 பேருக்கு இறப்பு நிவாரணம், 52 பேருக்கு ரூ.17,75,970 மதிப்பில் இ பட்டா, 44 பேருக்கு ரூ.9,13,345 மதிப்பில் வரன்முறைப்பட்டா என மொத்தம் 250 பேருக்கு ரூ.29,51,960 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறோம். உங்கள் குறைகளுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கின்றோம். நீங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து சாத்தான்குளம் பேரூராட்சி வீர இடக்குடி தெருவில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பேச்சித்தாய் அவர்களின் குடும்பத்திற்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பார்வையிட்டார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சா.புகாரி, சாத்தான்குளம் வட்டாட்சியர் இ.ரதிகலா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கண்ணன், சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


