பாஞ்சாலங்குறிச்சி தூத்துக்குடியின் வடமேற்கில் 18கி.மீ தூரத்தில் உள்ள வீரம் விளைந்த பூமி. இவ்வீரம் செறிந்த மண்ணில், வெள்ளையர் ஆதிக்கத்தை வேரறுக்கப் புறப்பட்ட, வீரபாண்டியக் கட்டபொம்மன் 03.01.1760 இல் பிறந்தார். இவர் 02.02.1790-இல் தமது 30ஆம் வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றுத் தம் தந்தை ஜெயவீரபாண்டியனாரைப் போலவே ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்து எதிர்த்துப் போராடினார். வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தைச் சார்ந்த 96 கிராமங்களை ஆறு பிரிவாகப் பிரித்து நீதி வழுவாது ஆட்சிபுரிந்தார்.
இந்நிலையில், ஆங்கில வாணிபக் கழகத்தினரிடம் ஆற்காடு நவாபு வாங்கியிருந்த கடனுக்காகத் தென்னாட்டில் வரி வசூலிக்கும் உரிமையை வெள்ளையர்க்கு 1792இல் வழங்கின. பொறுப்பேற்ற கிழக்கிந்தியக்கம்பெனி நிர்வாகம் 1795இல் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அவ்வறிக்கையில், “நவாபுக்குப் பாளையக்காரர்கள் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவர்கள் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி நடக்க வேண்டும். பாளையக்காரர்கள் கோட்டை கட்டுவதோ, படை திரட்டுவதோ கூடாது. சாதாரண மக்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல் பாளையக்காரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கம்பெனிக்கு அதிகாரம் உண்டு. பாளையக்காரர்கள் வெறும் குத்தகைதாரர்களே”என்று அறிவிக்கப்பட்டிருந்து. வீரபாண்டியக்கட்டபொம்மன் இந்த உத்தரவை ஏற்க மறுத்தார். இது பாளையக்காரர்களின் உரிமையைப் பறித்து அவர்களை அடிமைகளாக்கும் சதி என்பதை அறித்தார். “இந்தச்சூழ்ச்சியை, வஞ்சகத்தை எதிர்கொண்டு தூளாக்குவோம்” என்று முழக்கமிட்டார். வெள்ளையர்க்கு எதிராகக்கட்டபொம்மன் வீரமிகு அணி ஒன்றைத் திரட்டினார். நாகலாபுரம். ஏழாயிரம்பண்ணை, கோலார்பட்டி. காடல்குடி, குளத்தூர் ஆகிய பாளையக்காரர்கள் கட்டபொம்மன் அணியில் இணைந்தனர். சிவகங்கை மருது சகோதரர்களும், இராமநாதபுரம் அரசர் குடும்பத்தில் ஒரு பிரிவினரும், சிவகிரிப் பாளையக்காரரின் மகனும் இந்த அணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே பாளையங்களின் எல்லைகளை மறு அளவை செய்வதாகச் சொல்லி, பாஞ்சாலங்குறிச்சியைச் சார்ந்த அருங்குளம், சுப்பலாபுரம் என்னும் ஊர்களை எட்டயபுரம் பாளையக்காரருக்குக் கொடுத்தனர். திருவைகுண்டம், ஆழ்வார்திருநாகரி, ஆத்தூர், ஆறுமுகமங்கலம் ஆகிய வளமான நன்செய் நிலப்பகுதிகளை ஆங்கிலேயர் தங்கள் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு, வந்தனர். கட்டபொம்மன் இவற்றை ஏற்க மறுத்தார். இங்குத் தம்முடைய ஆட்களை நியமித்து வழக்கம்போல வரி வசூலித்து வந்தார். கட்டபொம்மன் தம்முடைய கூட்டணி வலிமை பெறும் வரையில் வரிகொடுக்க மறுத்துக்காலம் கடத்தினார். வெள்ளையருக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டார். ஆங்கில வியாபாரிகளுக்குத் துணி நெய்து கொடுக்கக்கூடாது என்று நெசவாளர்களுக்கு ஆணை பிறப்பித்தார். இராமநாதபுரம் அரசர் முத்துராமலிங்கசேதுபதியை வெள்ளையர் கைது செய்தது தொடர்பாக கி.பி.1797 ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. சிவகிரிப்பாளையக்காரர் மகனுக்கு ஆதரவாக இரண்டாயிரம் வீரர்களை ஊமைத்துரை தலைமையில் அனுப்பி வைத்தார். பாளையச்செயலாளர் சங்கரலிங்கம் பிள்ளையை அவர் மீண்டும் பதவியில் அமர்த்தினர். மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிவகிரிக்கோட்டை வெள்ளையர்க்கு எதிராகத் தாம் தொடங்கவிருக்கும் விடுதலைப் போருக்கு ஏற்ற இடம் என்று கட்டபொம்மன் திட்டமிட்டார்.
இராமநாதபுரத்தில் 10.09.1798-இல் கலெக்டர் ஜாக்சனுடன் கட்டபொம்மன் நடத்திய சந்திப்பு கலவரத்தில் முடிந்தது. மோதலில் வெள்ளையரின் துணைத்தளபதி கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். தானாபதிப்பிள்ளை மட்டும் சிறைப்பட்டார். இராமநாதபுரம் மோதல் குறித்து நடைபெற்ற விசாரணையில் ஜாக்சனுடைய நடவடிக்கையே சிக்கலுக்குக் காரணம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜாக்சள் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஜாக்சன் செய்த சூழ்ச்சிக்கு அவரையே பலியாக்கினார் கட்டபொம்மன். ஜாக்சன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், லூசிங்டன் மாவட்ட ஆட்சியராக 12.01.1797இல் பொறுப்பேற்றார். வரி நிலுவை சம்பந்தமாகத் தம்மைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு அவர் 16.03.1797 இல் கடிதம் எழுதினார். இதற்குக்கட்டபொம்மன் நல்ல நாள் பார்த்து வருவதாகவும், இராமநாதபுரம் வந்தபோது தம்மிடமிருந்து கும்பினி வீரர்கள் கொள்ளையிட்ட பொருட்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்றும் பதில் எழுதினார். கட்டபொம்மன் நடவடிக்கையால் சினம் கொண்ட கலெக்டர் பாஞ்சாலங்குறிச்சி மீது போர் தொடுக்கப் பரிந்துரைத்தார். மேஜர் பானர்மேன் கிபி 1799-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியைத் திடீரென்று முற்றுகையிட்டார். கட்டபொம்மன்,”மானம் ஒன்றே மனிதனுக்கு உயிர் மாற்றானிடம் மண்டியிடுதல் அவன் வீரத்திற்கும் ஊனமாகும். வாள்முனையில் சந்திப்போம்” என்று தாக்குதலைத்தொடங்கினார். நடந்த போரில் வெள்ளையரின் தளபதிகள் நான்குபேர் இறந்தனர் இறந்தவர்களுடைய கல்லறைகளை இன்றும் ஒட்டப்பிடாரம் அருகே காணலாம். முதல் நாள் போர் குறித்துப்பானர்மேன் கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில் “கோட்டையில் கால் வைக்கவே முடியவில்லை. நம் படைகளிடையே வீரம் குறைந்த பீதி நிலவியது. வெற்றி பெற முடியாமல் அச்சத்தால் பின் வாங்கினர். நம் பக்கத்தில் ஏற்பட்ட இழப்பு மிக அதிகமே” என்று குறிப்பிட்டுள்ளார். பாளையங்கோட்டையிலிருந்து 24 பவுண்டு பீரங்கிகளும் துணைப்படைகளும் வரும் வரை கோட்டையை முற்றுகையிட பார்மேன் முடிவு செய்தார். 24 பவுண்டு பீரங்கித் தாக்குதலுக்குக்கோட்டை தாங்காது என்பதால் கோட்டையை விட்டு வெளியேறி, கவர்னரைச் சந்திக்கலாம் என்று தானாபதிப்பிள்ளை வற்புறுத்தினார். கட்டபொம்மன் விருப்பமின்றிக் கோட்டையை விட்டு வெளியேறினார். புதுக்கோட்டைக் காட்டுப்பகுதியில் தங்கியிருந்த கட்டபொம்மனைப் புதுக்கோட்டை அரசர் கைது செய்து கயத்தாறில் பானர்மேனிடம் ஒப்படைத்தார். 16.10.1799 இல் கயத்தாற்றில் நடைபெற்ற விசாரணையில் கட்டபொம்மனுக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. மேஜர் 17.10.1799இல் எழுதிய கடிதத்தில், “நேற்று விசாரணை நடைபெற்ற சமயத்தில் கூடியிருந்தவர்கள் முன்பாகக் கட்டபொம்மனது போக்கும் நடத்தையும் அஞ்சா நெஞ்சத்துடனும், ஏளனத்துடனும் இருந்ததை நான் இங்குக்குறிப்பிடாமல் இருக்க முடியாது. தூக்கிலிடப்படும் இடத்திற்கு அவர் உறுதியுடனும் வீரத்துடனும் நடந்து செல்லும் போது வலப்பக்கமும் இடப்பக்கமும் கூடி நின்ற ஏனைய பாளையக்காரர்களை ஏளனத்துடன் உற்று நோக்கிக் கொண்டே சென்றார். தூக்குக்கயிற்றின் முன் நின்றபோது தம் சகோதரரைப்பற்றி மட்டும் கவலைப்பட்டதாகவும், கோட்டையை வீட்டுச்சென்றதற்கு வருத்தம் தெரிவித்தாகவும், என்னிடம் தெரிவிக்கப்பட்டது. என்று குறிப்பிட்டுள்ளார். கட்டபொம்மனின் சுதந்திர மூச்சு 16.10.1799 இல் கயத்தாற்றின் சாலை ஓரம் நின்ற புளியமரத்தில் ஆறியது. தியாகமெனும் திருவிளக்காய், தாய்நாட்டின் மானம் காக்கத் தன்னுயிர் ஈந்து அழியாப் புகழ்வாழ்வு வாழ்ந்தார் கட்டபொம்மன்.
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனை எதிர்த்து போரிட்ட தளபதி மேஜர் ஜான் பானர்மேன். அப்பொழுது திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த ஜாக்சன் (யிணீநீளீsஷீஸீ) ஆகிய இருவர்களை மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்களுக்குத்தெரியும். ஆனால் பத்துக்கு மேற்பட்ட தளபதிகளின் தலைமையில் இராணுவ வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படையெடுத்துள்ளனர். கர்னல்ஹெரான். தளபதிமுகம்மதுயூசுப்கான், மேஜிப்லிண்ட், கர்னல். புல்லாடன், ஜாக்சன்துரை, லூஷிங்டன், மேஜர் ஜான்பானர்மன், மேஜர் காலின் மெக்காலே போன்றோர் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் படையெடுத்துள்ளனர். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் என்ற பாளையக்காரனின் பெயர் எந்த அரசாங்க ஆவணங்களிலும் இருக்கக்கூடாது என்று அனைத்து மாவட்ட ஆவணங்களையும் அழித்துவிட்டனர்.
(தொடரும்)


