
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 396 நகர்ப்புற வார்டு உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 453 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநகராட்சி பகுதியில் 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள 750 வாக்குச்சாவடிகளில் 3 ஆயிரத்து 600 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 319 வாக்குச்சாவடிகளிலும் காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கும்போது மந்தமாக இருந்த நிலையில் 7.45 மணிக்கு மேல் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தனது வாக்கை பதிவு செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். இதுபோல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதே வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மாநகராட்சி பகுதியில் 69 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிரா மற்றும் வெப் கேமிரா பொருத்தப்பட்டு இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. வாக்களிக்க வருவோரிடம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் கையுறை வழங்கப்பட்டது.