கண்ணகி அம்மனுக்கு “வெற்றிவேல்செழிய நங்கை” என்றொரு பெயரும் உண்டு. ஆனால் நிறைய பேர் இது அங்காள பரமேஸ்வரி அம்மன்தான், கண்ணகி கோயில் கிடையாது என்று கூறுவோரும் உண்டு.
பிற்காலத்தில் கொற்கை அகழாய்வுக்கும் எனக்கும் பல தொடர்பு ஏற்பட்டது. சங்க காலக் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கு முன்பு கொற்கைக்கும் எனக்கும் உண்டான தொடர்ப்பு குறித்து பேசலாம் என நினைக்கிறேன். கொற்கையை பற்றி நான் அறிந்தது தற்போதும் எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.
கொற்கை துறைமுகம் நான் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இருந்தாலும் எனக்கு அதிக அறியப்படாத ஒரு ஊராக இருந்தது. நான் 1992 ல் பேருந்து நடத்துனராக இருந்தேன். ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து மனையில் இருந்து தடம் எண்3 என்ற நகர பேருந்தில் பணி புரிந்தேன். அந்த சமயத்தில் ஆறுமுக மங்கலம் என்னும் ஊரில் இரவு தங்கியிருப்பேன். அப் போது கூட இப்பகுதி மிகப்பெரிய வரலாற்று பொக்கிஷம் நிறைந்த பூமி என தெரியாமல் தான் இருந்தது.
பிற்காலத்தில் எனக்கும் கொற்கைக்குமான நெருக்கத்தினை உருவாக்கியது. குறிப்பாக நான் தொடர்ந்து நூல் எழுதி வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரம் அய்யா கொற்கையில் கண்ணகி கோயில் உள்ளது .அதை நான் பார்க்கவேண்டும் என்று கூறினார். அவரோடு கொற்கையை நோக்கி கிளம்பினேன். அப்போதும் கூட கொற்கையை பற்றி பெரிய அளவில் புரிதல் எனக்கு இல்லாமல் தான் இருந்தது.
இது ஒரு புறமிருக்க நெல்லை வசந்த் தொலைக்காட்சியில் நெல்லை மண் பேசும் சரித்திரம் தொடருக்காக ஆதிச்சநல்லூரில் முதல் எபிசோட் சூட்டிங்கை முடித்து விட்டு அடுத்த கட்டமாக கொற்கை சென்ற போது பல நபர்களை சந்தித்தேன். அப்போது தான் கொற்கையில் கண்ணகி கோயில் இருந்ததையும், அக்க சாலை விநாயகர் கோயில் பற்றியும் அற்புத தகவல்களையும் அறிந்து கொண்டேன்.
அவை அனைத்தையும் ஒன்று திரட்டி “நெல்லைத் துறைமுகங்கள்” என்ற பெயரில் ஒரு நூல் எழுதினேன். அதை காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. கொற்கை துறைமுகம் முதல் இன்றைய தூத்துக்குடி துறைமுகம் வரை அந்த நூலில் எழுதினேன். அதற்கு எனக்கு மிக உதவியாக இருந்த நூல், சாத்தான்குளம் ராகவன் அய்யா எழுதிய கோநகர் கொற்கை யாகும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது கொற்கையில் சுற்றுலா துறை மூலமாக சுற்றுலா நகராக அறிவிக்க எடுத்து கொண்ட நடவடிக்கை பேராசிரியர் தவசிமுத்து மாறன் அய்யா மூலம் எனக்கு கிடைத்தது. நண்பர் பாடகர் லெட்சுமிபுரம் காமராஜ் காந்தி நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது கொற்கை அருகே உள்ள வயற்காடுகளில் நிறை சிப்பிகள் குவியல் குவியலாக கிடைககும் என்றார். தொடர்ந்து கொற்கை பற்றி நிறைய தேடினேன்.
இதற்கிடையில் கொற்கையில் லக்னோ பழைய பீர்பால் ஆய்வகத்தினை சார்ந்த மொர்த்தகாய் கொற்கை துறைமுகம் எப்போது கை விடப்பட்டது என்ற ஆய்வு செய்தார். அது குறித்து எனக்கு தகவல் கிடைத்தது.
இந்த கால கட்டத்தில் தான் நான் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆதிச்சநல்லூர் பற்றி வழக்கு தொடர்ந்திருந்தேன். வழக்கின் படி ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய ஏற்பாடு செய்த காலம். இந்த சமயத்தில் தான் கொற்கை துறை முகத்தினை ஆய்வு செய்ய வேண்டும் என எனது வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி மூலமாக மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன் பயனாக மாநில அரசு தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையில் அகழாய்வை துவங்கியது.
இந்த இடத்தில் கொற்கையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தான் நான் கொற்கையோடு பயணிக்க ஆரம்பித்த காலமாகும்.
சங்ககால பாண்டியர்களின் துறைமுகமாக கொற்கை போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் சங்கமருவியக் காலத்தைச் சார்ந்த காவியமான சிலப்பதிகாரமும் கொற்கையைப் பற்றி விவரிக்கின்றன. இதுதவிர, “பெரிப்ளஸ் எரித்திரியன்கடல்” என்கிற செங்கடல்வழி பயணநூலும் தாலமியின் நிலவியல் நூலும் கொற்கையை முறையே கொல்சிஸ் மற்றும் கொல்காய் என்றும் குறிப்பிடுகின்றன.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1968-ஆம் ஆண்டு கொற்கையில் மேற்கொண்ட அகழாய்வில் நிலப்பகுதியிலிருந்து இரண்டரை அடி ஆழத்தில் ஆறு வரிசைகளில் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட செங்கல் கட்டுமானத்தினை வெளிப்படுத்தியது. மேலும், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மூன்று சுடுமண் உறைகள் செங்கல் கட்டுமானத்தின் கீழ் கண்டறியப்பட்டது. இதுதவிர, தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. கொற்கை அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கரிமத்தினை பகுப்பாய்வு செய்ததில் கொற்கையின் காலம் பொ.ஆ.மு. 785 என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச்சிறந்த துறைமுகமாக செயல்பட்டிருந்தது. மேலைநாட்டுடன் குறிப்பாக ரோம் நாட்டுடனும், இலங்கையுடனும், பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் கடல்வழி வணிகம் நடைபெற்றுள்ளது. அகழாய்வாளர்கள் கொற்கையில் ரோமநாட்டு மட்கலன்களும், ரௌலட்டட் வகை பானை ஓடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.
இதற்கிடையில் நமது வழக்குக்குபிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட அகழாய்வில் கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வடஇந்திய கருப்பு வண்ண மெருகேற்றப்பட்ட பானைஓடுகளும் மற்றும் கருப்பு பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகளும் வெளிப்படுத்தப்பட்டன. இவை தமிழ்நாடானது இந்தியாவின் பிறபகுதிகளோடு குறிப்பாக கங்கை சமவெளி நகரங்களுடன் நெருங்கிய உள்நாட்டு வணிகம் நடைபெற்றுள்ளதைக் எடுத்துக்காட்டுகிறது. ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வுகளில் பெறப்பட்ட கரிமப்பகுப்பாய்வுக் காலக்கணிப்பின்படி கி.மு 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிகமுக்கியத் துறைமுகமாக செயல்பட்டிருந்ததை சுட்டிக்காட்டுகிறது. கொற்கையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 6 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 9 அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கறுக்கும் தொழில் கூடம் இருந்ததற்கான அடையாளங்கள், வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள், சங்குகள், சங்கு வளையல்கள், வண்ண பாசிமணிகள், பானைகள், சுடுமண் உருவ பொம்மைகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கிடையில் 2022ஆம் ஆண்டு தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிப்பதற்காக கடல் சார் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடல் சார் முன் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பயனாக தூத்துக்குடி துறைமுகத்தில் இந்த கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல் சார் முன்கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கியது. இதனை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்தார்.
இந்த ஆய்வு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல் பகுதியில் நடைபெற்றது.
இந்த ஆய்வின் முடிவில் கொற்கையில் புதைந்துள்ள மிகப்பெரிய துறைமுகமும், அதை சார்ந்த வரலாற்றுத்தகவல்களும் வெளிவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக நாம் மிகவும் சந்தோசப்பட்டோம்.
இந்த சமயத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் அகழாய்வு பணி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆகவே இவர் காலத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என ஆய்வு நடப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் உலக நாகரீகமே பொருநை நாகரீகத்தான். இந்த நாகரீகம் தாமிரபரணி கரையில் இருந்து துவங்குகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த காலத்தில் அவர் ஆட்சி பொருப்பில் இருப்பது மிகச்சிறப்பாகும். இவர் அடிககடி இந்த தொல்லியல் களங்களை பார்க்க வருவது மிகச்சிறப்பாகும்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொற்கைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் கொற்கையில் உள்ள சுற்றுலா விளக்க கட்டிடத்தில் கடந்த வருடம் நடந்த அகழாய்வில் கிடைத்த பாதுகாப்பாக வைத்திருந்த அகழாய்வு பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து அருகில் இருந்த 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தை பார்வையிட்டார். அவருக்கு நான் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு) விளக்கமளித்தேன். தொடர்ந்து அக்கசாலை விநாயகர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை பார்வையிட்ட அவர் கல்வெட்டுகள் குறித்து கோவில் பூசாரியிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மறு நாள் சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களை கூட்டி வந்தார். அவர் கொட்டும் மழையில் கொற்கையை சுற்றிப் பார்த்தார்.
அப்போது அவர் கொற்கை கோயில் குறித்து நிறைய பேசினார். “கொற்கை கோயில் கண்ணகி கோயிலே அல்ல, இது இங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோயில்” என்ற வாதம் பலருக்கு உண்டு. இந்த ஊரில் கர்ண பரைம்பரை கதையே ஆயிரக்கணக்கான எருமை மாடு பலியிட்டதாகவும். அதனால் மடை நிறை ரத்தம் ஓடி வந்தாதாம். இதனால் கண்ணகி அம்மன் தன் முகத்தினை திருப்பி கொண்டதாகவும் கூறுவார்கள். இது குறித்து நான் ஏற்கனவே கடந்த பகுதியில் கூறியுள்ளேன்.
ஆனால் “பாலகிருஷ்ணன் அய்யா கூறும் போது கண்ணகி அம்மனுக்கு கையில் சிலம்பும், ஒரு மார்பின்றியும் இருப்பார்” என கூறினார். அதை அமோதித்தார் கோயில் அர்ச்சகர். அம்மனை நீராட்டும் போது அதை தான் அறிந்தாகவும், கையில் சிலம்பு உள்ளது. சிலையில் அம்மனுக்கு ஒரு பக்க மார்பு இல்லை” என்றார்.
இப்போது இந்த கோயில் கண்ணகி கோயில் தான் என உறுதியானது.
இதற்கிடையில் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் இடையை கடற்கரை ஓரத்தில் 200 மீட்டர் நீளத்திற்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால சுவர் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதை 700 ஆண்டுகளுக்கு முன்பு சேர மன்னரால் உருவாக்கப்பட்ட துறைமுகம் இருந்த பகுதி என ஒருவர் கூறினார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் என்பவர் கடந்த அக்டோபர் 2022, 18ம் தேதி திருச்செந்தூரில் இருந்து வீரபாண்டியபட்டணம் வழியாக கடற்கரையை கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூருக்கும், வீரபாண்டிய பட்டணத்திற்கும் இடையே சுமார் 200 மீட்டரில் ஒரு சுவர் போன்ற அமைப்பை கண்டுபிடித்தார்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் இந்த இடம் குறித்து வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய குறிப்பை பத்திரிககையாளர்களுக்கு கொடுத்தார்.
அந்த குறிப்பில் 500 ஆண்டுகள் பழமையான வரைபடம் இருந்தது. அந்த வரைபடத்தில் காயல்பட்டினத்திற்கும் வீரபாண்டியபட்டணத்திற்கும் இடையில் உள்ள கொம்புதுறை என்ற ஒரு இடம் உள்ளது. இந்த பகுதிகளுக்கு ஆரம்பகால பெயர் சோனாடு கொண்டான் பட்டணம். கடல் வாணிபத்துக்கு இந்த துறைமுகம் பயன்படுத்தப்பட்டது. கிபி.1388 ஆம் ஆண்டு இந்த பகுதியை ஆண்ட உதய மார்த்தாண்டவர்மன் என்ற சேர மன்னன் இந்த சோனாடு கொண்டான் பட்டணத்திலிருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மதிப்பில் 100 பணத்துக்கு கால் பணம் ஜமாத் நிர்வாகியான அபூபக்கருக்கு மானியம் கொடுக்க உத்தரவிட்டுள்ளான்.
அதன்பின் இப்பகுதிக்கு வந்த போர்ச்சுகீசியர்கள் உதயமார்த்தாண்டனின் வாரிசான உன்னி கேரளவர்மனிடம் அப்பகுதியை குத்தகைக்கு எடுத்து துறைமுகமாக பயன்படுத்தினார்கள். அந்த காலத்தில் கடல் கூம்பு வடிவில் இருந்ததால் இதற்கு கூம்புத்துறை என்று பெயரிட்டார்கள். இந்த கூம்புத்துறை தான் நாளடைவில் கொம்புதுறை ஆகிவிட்டது. அந்த காலத்தில் வந்த சுனாமியால் கூம்பு வடிவம் அழிக்கப்பட்டு கொம்புத்துறை அழிந்து கல்வெட்டு மண்ணில் புதைந்து கடல் ஒரு கிலோமீட்டர் உள்வாங்கி சென்று விட்டது. இயற்கை துறைமுகமான காயல்பட்டிணம் துறைமுகம் அழிந்து கடற்கரை நகராகிவிட்டது.
ஏற்கனவே தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கொற்கை துறைமுகம் 2500 வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்துள்ளது. இந்த துறைமுகம் கடல் உள்வாங்கிய பிறகு பழைய காயலுக்கும், தொடர்ந்து தூத்துக்குடிக்கும் நகர்ந்து விட்டது. இதே போன்ற பல துறைமுகங்கள் பழைய காயலை சுற்றியுள்ள பகுதியில் இருந்துள்ளன. அதில் கொம்புத்துறை அருகில் உள்ள துறைமுகத்தைப் பற்றிய ஸ்டீபன் என்பவர் வைத்திருக்கும் ஆவணம் ஒத்துப்போவதாக தெரிகிறது. தற்போது கடல்சார் ஆய்வு மேற்கொண்டு வரும் மாநில தொல்லியல் துறை கொம்புத்துறை பகுதியில் உள்ள இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து உண்மைத் தகவலை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து தொல்லியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
சரி. இதெல்லாம் இருககட்டும். ஆத்தூரில் கொற்கை துறைமுகம் சம்பந்தப்பட்ட தொல்லியல் எச்சங்கள் உள்ளது. அந்த எச்சங்கள் தான் என்ன?
( பொருநை ரகசியத்தை தேடி)


