ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைள் அனைத்தும் தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட பேட்துரைச்சாமிபுரம் பகுதி தெருக்களில் மழைநீர் செல்வதற்கு வழியின்றி தேங்கிய நிலையில் குளம் போல காட்சி அளித்தது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து டவுண் பஞ்சாயத்து தலைவரை நேரில் சந்தித்து மழைநீரை அகற்றிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, டவுன் பஞ்சாயத்து தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் பணியாளர்கள், கவுன்சிலர் சாலமோன் ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று மழைநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
தெருக்களில் தேங்கி கிடந்த மழைநீர் மோட்டார் மூலம் துரிதமாக அகற்றப்பட்டது. இதுபோன்று டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட வார்டுகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணிகளும் துரிதமாக நடைபெற்றது.
மேலும் ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் மழைநீர் செல்வதற்கு தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் சிமெண்ட்குழாய்கள் அமைக்கப்பட்டு மழைநீர், கழிவுநீர் செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, டவுன் பஞ்சாயத்து தலைவர் சினேகவள்ளிபாலமுருகன் கூறும்போது, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நல்லமழை பெய்து வரும் நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தேவையான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எங்காவது தெருக்கள், ரோடுகள் மற்றும் குடியிருப்புபகுதிகளில் மழைநீர் எதுவும் தேங்கியிருப்பின் அதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்றார்.


