தூத்துக்குடியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் 94 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் முன்னிலையில் 94 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை இன்று வழங்கினார்.
இம்முகாமில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களிடையே உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக கல்வி நிறுவனங்களையும், வங்கியாளர்களையும் ஒருங்கிணைத்து இன்றைய தினம் இந்த கல்விக்கடன் முகாம் நடைபெற்று வருகிறது.
உங்களது கனவுகளுக்கும், பொருளாதார வசதிக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளியானது உங்களது கனவுகளை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. பெற்றோரின் பொருளாதார வசதி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு நமது கல்வி செலவு சுமையாக இருக்க விரும்பவில்லை என்ற நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காத்தான் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இந்த முகாமிற்கு 14 வங்கிகள் வருகை தந்து உங்களுக்கு கல்வி கடன் வழங்க வந்துள்ளார்கள்.
உங்களுக்கு கல்வி கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. கல்வி கடனை நீங்கள் 6 மாதம் முதல் ஒரு வருடம் கழித்து வேலைக்கு சென்ற பின்பு கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப செலுத்தலாம். எனவே நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் உங்களது கனவுகளை அடைய வேண்டும். உங்களது கனவுகளை அடைந்து வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு செல்ல வாழ்த்துக்கள் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
இம்முகாமில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசும்போது தெரிவித்ததாவது: மாணவர்களின் உயர் கல்விக்காகவும், கை நிறைய சம்பாதிக்கவும், பல்வேறு கனவுகளோடு பெரிய வேலையில் அமர வேண்டும் என்பதற்காக இந்த வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார்கள். அதற்கேற்றார்போல் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பாடப்புத்தகம் மட்டுமல்லாமல் கணினி, தட்டச்சு மற்றும் போட்டித்தேர்வுகள் ஆகியவற்றிற்கும் படிக்க வேண்டும். செய்தித்தாள் தினமும் படிக்க வேண்டும். கடன் வாங்கி கற்கிறோம் என்பதை நினைவில் வைத்து நீங்கள் மிகவும் பொறுப்புடன் கைநிறைய சம்பாதித்து பெற்றோரை உயர்ந்த நிலையில் வைப்பதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.நல்ல முறையில் கல்வி கற்று உயர் அதிகாரிகளாக, சான்றோர்களாக மற்றும் எழுத்தாளர்களாக நீங்கள் உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இம்முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி துரைராஜ், வ.உ.சி. கல்லூரி முதல்வர் (பொ) தர்மர் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


