இந்தியாவிலேயே இப்போது இங்கு கொண்டாடுவது போல் பத்தாம் நூற்றாண்டுக்கு பின்தான் தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு முன்பு வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் குறிப்பிடப்படும் ‘யட்ஷ ராத்திரி’ யை தீபாவளி என்று தவறாக கணிப்பவர்களும் இருக்கிறார்கள். அது கார்த்திகை அமாவாசை இரவில் கொண்டாடப்பட்ட ‘சுகராத்திரி’.
கி.பி.1250ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கி.பி.1117ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
தமிழ்நாட்டில் விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் உருவானது முதலே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்பட்டது. தொடக்கத்தில் பெரிய கோயில்களில் மட்டும் விளக்கேற்றி கொண்டாடப்பட்டது.
திருப்பதி திருமலை கோயிலில் உள்ள கி.பி.16ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் இந்த தகவல் காணப்படுகிறது. ஆனாலும், ஆங்கிலேயர் காலம் வரை இது கோயில் ‘திரு’விழாவாகவே இருந்தது, ‘தெரு’விழாவாக வரவில்லை.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இந்து மதம் என்னும் கட்டமைப்பே உருவானது. அதன்பின்பே தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் ஓரளவு சமுதாயத்தில் பரவியது. அதுவும், விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற திலகர் போன்றோர் அரசியல் நிகழ்வுகளிடையே ஆன்மீக கோட்பாட்டையும் இணைத்து திணித்ததன் பின்பே வெகுசன விழாவாக மாறியது.
தமிழ்நாட்டில் சைவ, வைணவ சமயக் குரவர்களான 63 நாயன்மார், 12 ஆழ்வார்கள் காலத்தில் தீபாவளி கொண்டாடப்படவில்லை என்பது உறுதியாகிறது. 1732ல் முதன்முதலில் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட சதுரகராதியில் பல்வேறு விழாக்களை பற்றிய தகவல் இருந்தும் தீபாவளி குறித்த தகவல் இல்லை. 19ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டிற்கு வந்து தங்கி பயணக் குறிப்புகளையும் மக்களின் பழக்கவழக்கங்களையும் எழுதிய அயல்நாட்டவரின் பயணக் குறிப்புகளில்கூட தீபாவளிப் பண்டிகைக் குறித்து எந்தப் பதிவும் கிடையாது. பிராமணரான உ.வே.சாமிநாத அய்யர் வாழ்க்கை வரலாற்றிலும் தீபாவளி கொண்டாடிய சம்பவம் இல்லை.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை திருக்கார்த்திகையே தீப விழாவாக தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அதை சைவ சமயம் உள்வாங்கி அடி முடி புராண கதைகள் மூலம் தம்வயப்படுத்திய பின்பு சாராம்சத்தை இழந்ததோடு, முன்பு போல் நகரங்களில் தமிழர் விழாவாக கொண்டாடப்படவில்லை. சைவ விழாவாகவே கொண்டாடப்பட்டது. அதேசமயம், தீபாவளி ஆரம்பத்திலேயே சமய விழாவாகவே அறிமுகமானது.
தமிழர் வாழ்வியல் மரபுப்படி, விழாக்கள் அனைத்துமே வேளாண் தொழில்சார்ந்த பணிகள் இல்லாத அறுவடைக்குப் பிந்தைய காலகட்டத்தில் கொண்டாடப்படும் என தொ. பரமசிவன் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
‘தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை’ என சைவ அறிஞர் அ.கி. பரந்தாமனார் ‘மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு’ என்னும் நூலில் எழுதியுள்ளார்.
‘தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று’ என்று தமிழ்ப் பெரும் புலவர் கா.சுப்பிரமணியப் பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு பல்வேறு அறிஞர்கள் ஆதாரத்துடன் சொன்ன கருத்துகளால் தீபாவளி எளிதாக அனைத்து தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
தீபாவளியின் அடையாளமான வெடி அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை. எனவே, ஆரம்பக் காலத்தில் பட்டாசு வெடித்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
விடுமுறை, போனஸ், கோயில் நடை திறப்பு என பல மகிழ்ச்சி வாய்ப்புகள் இருந்தாலும், பொங்கல் போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாக தீபாவளி இல்லை. தமிழர்களின் பண்பாட்டுடனும் தமிழ்நாட்டின் பருவநிலையுடனும் கூட இது அதிகம் ஒத்திசையவில்லை. ஆனால், வணிகத்தை வளர்க்கும் விழாவாக தீபாவளி இருக்கிறது.
தீபாவளி இந்து பண்டிகையா என்பதிலேயே பிரச்சினை இருந்ததால் இந்துகள் அனைவராலும் ஏக காலத்தில் கொண்டாடப்பட்டதாக தெரியவில்லை. சமணம், பௌத்தம் சார்ந்ததாக இருந்த தீபாவளி, பின்னர் சைவ, வைணவ பண்டிகையாக மாறியுள்ளது.
ஆகவே தான், திருக்கார்த்திகைத் திருவிழா திருவாதிரைத் திருவிழா தைப்பூசத் திருவிழா பங்குனி உத்திரம் சித்திரைப் பிறப்பு வைகாசி விசாகம் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகிய சைவம், வைணவத்துக்கு முந்தைய விழாக்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தீபாவளி முந்திக்கொண்டது.
( முழு கட்டுரைக்கு: ‘தேவியின் கண்மணி’ தீபாவளி மலர்)


