நாசரேத் அருகே புன்னையடி – பூச்சிக்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ள முள்மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, கச்சனாவிளை கிராமப்புற பகுதியில் புன்னையடி- பூச்சிகாடு செல்லும் சாலை குதிரை மொழி காப்பு காட்டில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையின் இரு பக்கமும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக கொக்கி முள் செடிகள் அமைந்துள்ளன.
இந்த கொக்கி முள் செடிகள் சாலையின் இரு பக்கமும் அடர்த்தியாக இச் சாலையை சூழ்ந்திருப்பதால், இவ்வழியாக பேரூந்துகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு முள் மரத்தினால் காயங்கள் ஏற்படுகிறது. மேலும் தூண்டில் அமைப்பு கொண்ட இந்த கொக்கி முள் செடி கடுமையான காயங்களை ஏற்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், பாரம்பரிய வேம்பு பனைமரம் போன்ற அனைத்து மரங்களையும் அழித்துவிடக் கூடியது.
தற்போது வடகிழக்கு மழை பெய்து வருவதால் மழை தண்ணீர் பட்டு ரோட்டில் சாயும் நிலையில் உள்ளது.ஆகையால் மேற்படி சாலையின் இரு பக்கமும் உள்ள முள் மரங்களை அகற்றி மேற்படிச்சாலையில் பயணிக்கும் பொது மக்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


