
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு வடிகால் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்எஸ் முத்து தலைமையில், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு முழக்கமிடடனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி ஆனையரிடம் அளித்த மனுவில் “தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான பால்பாண்டி நகர், அன்னை தெரசா நகர், கதிர்வேல் நகர் பகுதிகள் 2015 முதல் ஆண்டு தோறும் மழைநீரால் கடும் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக அன்னை தெரசா நகர், பால்பாண்டி நகர் மெயின் (சர்ச் அருகில்) மற்றும் கதிர்வேல் நகர் மெயின் (முருகன் ஸ்டோர் அருகில்) ஆண்டுதோறும் மழைநீர் தேங்குகிறது. இந்த சாலை ஏற்கனவே பள்ளமான சாலையாக உள்ளது.
இந்த சாலை தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை இருசக்கர வாகனத்தில் வரும் போது பழுதாகி விடுகிறது. மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே போர்க்கால அடிப்படியில் மழைநீரை வெளியேற்ற வடிகால் அமைத்து தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும். ராஜீவ் நகர் 8வது தெரு மேற்கு மற்றும் 9வது தெரு (பிள்ளையார் கோவில் அருகில்) உள்ள தெரு ஆண்டுதோறும் மழைநீர் தேங்கி மக்கள் கடும் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. மழை பெய்யும் பொழுதெல்லாம் மழைநீர் தேங்கியிருக்கும் நிலை உள்ளது. இந்த பகுதியில் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில், கார்த்திக், சிரியாத், முத்து சேகர், மாரியப்பன், ஆதிலெட்சுமி, ஜய்யம்மாள், தனலெட்சுமி, மாடத்தி, ஜெபஸ்தியான், மாடசாமி, ஆபிரகாம், தங்கையா, டேனியல், சதிஷ், கிஷோர், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.