நல்லதொரு முயற்சி… ஏரல் லோபா முருகன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்
ஏரல் கல்வியாளர் லோபா முருகன் அவர்கள் எதைச் செய்தாலும் அதை மிகுந்த நேர்த்தியுடனும், சிறப்புடனும் செய்து முடிப்பதில் வல்லவர். கல்விப் பணியுடன் சமூக அக்கறையையும் இணைத்து செயல்பட்டு வரும் அவர், தனது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் படைப்பாற்றல் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் மின் இதழ் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
அந்த மின் இதழுக்கு “லோபா சேப்பியன்ஸ்” எனப் பெயரிட்டுள்ளார். மாணவர்களின் சிந்தனைகள், எழுத்துத் திறன், படைப்பாற்றல் ஆகியவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தும் சிறந்த முயற்சியாக இந்த இதழ் அமைந்துள்ளது.
இந்த மின் இதழின் முதல் இதழ் வெளியீட்டு விழா 03.11.2026 அன்று பள்ளி வளாகத்தில் காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
கல்வியாளர் லோபா முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்னை வி.ஜி. சரவணன் அவர்கள் மின் இதழை வெளியிட்டார். முதல் இதழை நான் (முத்தாலங்குறிச்சி காமராசு) பெற்றுக்கொண்டேன்.
எங்களது தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய எழுத்து ஆளுமைகளான கவிஞர் ஏரல் ராஜன், முனைவர் கே.ஆர்.பி. மணி மொழிச்செல்வன், கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன், எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன், ஆங்கில ஆசிரியர் அருணாசலம் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தியும், இதழின் முயற்சியைப் பாராட்டியும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த சிறப்பான முயற்சியில் கல்வியாளர் லோபா முருகன் அவர்களின் தலைமையில் பணியாற்றும் இதழாசிரியர் திருமதி எஸ்தர் ஜெயின் மேரி, முதன்மை இதழாசிரியர் முனைவர் வெங்கடசுப்பிரமணியன், இணை இதழாசிரியர் திருமதி லிற்றிஷியா, இணை இதழாசிரியர் திரு. ரியாண்ட்ஸ் ஆகியோருக்கும், இந்த இதழில் தங்களது படைப்புகளை வழங்க உள்ள மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழாவைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கல்வியையும், இலக்கியத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்து முன்னெடுத்து வரும் இந்த நல்ல முயற்சிக்கு எனது பாராட்டுகள்.
இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய கல்வியாளர் லோபா முருகன் அய்யா அவர்களுக்கு எனது நன்றிகள் பல.
அன்புடன்,
முத்தாலங்குறிச்சி காமராசு


