திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பௌர்ணமியன்று வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பௌர்ணமி தோறும் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு வசதி குறித்து இன்று திருச்செந்தூர் கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.*
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்ததாவது, பக்தர்கள் சாமி தரிசனம் செல்வதற்கு சிறப்பு தரிசனம் பொதுதரிசனம் என வழிகாட்டி போர்டுகள் வைக்கப்பட்டு கடற்கரை பகுதியில் பொதுமக்கள் குளிக்கும் போது ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க கடலில் கயிறு கட்டியும், மீட்பு படகுடன் கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தரிசனம் மேற்கொள்ள சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் சாதாரண உடையில் பொதுமக்களுடன் கலந்து எல்லா இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு திருட்டு போன்ற எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என மொத்தம் 150 இடங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், கோவிலின் அருகே கட்டுமான பணி நடைபெற்று வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதனையடுத்து கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பணிகள் குறித்த அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், திருச்செந்தூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


