தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதிக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோது அன்றைய ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து தூத்துக்குடி – கோயம்புத்தூர் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி நடைபெற்று வந்தது. கொரானா காலத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி – கோவை ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.
அது காலதாமதம் ஆகிய காரணத்தால் தூத்துக்குடி – மேட்டுபாளையம் ரயில் சேவை வேண்டும் என கடந்த 20.12.2022 அன்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாது தொடர்ந்து நேரிலும் வலியுறுத்தி வந்ததார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்சமயம் ஒன்றிய ரயில்வேத்துறை தூத்துக்குடி – மேட்டுபாளையம் வாராந்திர ரயில் சேவையை புதிதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய ரயிலானது வருகிற 19.07.2024 வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையத்தில் தொடங்கப்படுகிறது. அதன்படி வாரத்தில் வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்தும், வியாழன், சனி ஆகிய இரு தினங்கள் தூத்துக்குடியில் இருந்தும் இயக்கப்படுகிறது.
வருகிற 20.07.2024 சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் இந்த புதிய ரயில் வேலை தொடங்கி வைக்கப்படுகிறது. இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் புறப்படும் இந்த ரயிலானது, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துகடவு, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேட்டுப்பாளையத்தில் இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயிலானது அதே மார்க்கத்தில் தூத்துக்குடிக்கு அதிகாலை 4.20 மணிக்கு வந்து சேரும். தூத்துக்குடி மக்களின் நலனுக்காக இந்த ரயில் சேவையை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி பெற்று தந்த கனிமொழி கருணாநிதி எம்பிக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் இந்த ரயில் சேவை வசதியை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


