ஸ்ரீவைகுண்டம் அருகே தம்பதியை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் அவரது தந்தைக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புலமாடன் மகன் வண்ணமுத்து (65), கடந்த 12.5.2018 மாலை 5 மணியளவில் இவருக்கு சொந்தமான காலி இடத்தில் இருந்த வேலிக் கருவை மரத்தை அவரது அனுமதியின்றி அதே ஊர் உலகம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை பாண்டியன் மகன் மாயாண்டி என்ற ரவி (62), மனைவி சுப்புலட்சுமி (57), மகன் ஜோதி மணிகன்டன் (28) ஆகியோர் வெட்டினார்களாம்.
இதனை பார்த்து வண்ணமுத்து மற்றும் அவரது மனைவி அவர்களை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த தந்தை – மகன் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து வண்ணமுத்து மற்றும் அவரது மனைவியை அரிவாளால் வெட்டினார்களாம். இதில் 2பேரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், அப்போதைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் வழக்குப் பதிந்து 3பேரையும் கைது செய்தார்.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று தீர்ப்பு அளித்தார். அதில், மாயாண்டி என்ற ரவிக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், ஜோதி மணிகன்டனுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 5ஆயிரம் அபராதம் விதித்தும், சுப்புலட்சுமியை இவ்வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜரானார்.


