
நெல்லை கருங்குளம் பகுதியில் இருந்து மேலப்பாளையம் வரை பாளையங்கால்வாய் முதல் கட்ட தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுகுமார் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்திரா முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த சமயத்தில் நானும் உடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நெல்லை மாநகரப் பகுதியில் பிரதானமான பாளையங் கால்வாய் திகழ்ந்து வருகிறது இந்த கால்வாயில் அமலை செடிகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளது . இதனை சீர் செய்யும் விதமாக தனியார் அமைப்பான எக்ஸ்னரோ நிறுவனம் மற்றும் நீர்வளத் துறையும் இணைந்து கருங்குளம் பகுதி முதல் பாளையங்கால்வாயில் அமலை செடிகள் மற்றும் கரையில் உள்ள முட்செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளை கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மரு.சுகுமார் அவர்களுக்கு திருநெல்வேலி சிட்டிக்குள் பாயும் தாமிரபரணி சம்பந்தப்பட்ட கால்வாய்களை தூர் வாரவேண்டும் என்று ஆசை. அதன் படி பாளயங்கால்வாயைதூர் வாரும் பணியை குறிச்சி பகுதியில் ஆரம்பித்து வைத்தார். ஆனால் அந்த பணி முழுமையடையவில்லை. காரணம் சாக்கடை மற்றும் அமலை செடிகளை அள்ள அள்ள அது குறையாமல் மேலிருந்து வந்து கொண்டே இருந்தது.
எனவே இதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார். அதில் நானும் கலந்து கொண்டேன்.
எக்ஸ்னரோ நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஸ்ரீனிவாசன், ராதா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆலோசனையில் திருநெல்வேலி மாநகராட்சி துவங்கும் இடத்தில் இருந்து பாளையங்கால்வாயில் தூர்வாரும் பணியை துவங்கினால் மிக்க உதவியாக இருக்கும் என்று கோரினேன். மாவட்ட ஆட்சியர் உடனே இதற்கான பணியை செய்ய ஆணையிட்டார்.
மேலும் அனைதது கால்வாய்கள் குறித்து கேட்டறிந்தார். 1996&2021ஆம் காலகட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களும் தூர் வாரப்பட்டது. அதில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு கரைகள் செம்மைபடுத்தப்பட்டன. அதன் பிறகு எந்த பணியை நடைபெறவில்லை என்று கூறினேன். அதற்கும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அணுகி திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்களையும் சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார். அந்தபணியை மறுநாள் காலை யிலேயே துவக்கி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
பச்சையாற்றை பாளையங்கால்வாய் கடந்து வரும் வழியில் உள்ள 13 மதகு குறித்தும் , அந்த மதகை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். தாமிர பரணிஆற்றங்கரையில் பச்சையாற்றை பாளையங்கால்வாய் கடக்கும் இடம் மிகவும் விசேசமானது. தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு இவ்விடம் பெருமைபட வைக்கிறது என்று கூறினேன். உடனே அவ்விடத்தினை மறுநாள் பார்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
கூறியது போலவே 9.05.2025 அன்று காலை கருங்குளத்தில் பாளையங்கால்வாயில் தூர் வாரும் பணியை துவக்கி வைக்க எக்ஸ்னரோ நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. குறிச்சியில் இருந்த ராட்சத இயந்திரம் கருங்குளம் பகுதிக்கு தூக்கி வரப்பட்டது. அதிகாலை 6 பணிக்கு பணியை ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தோம்.
எதிர்பார்த்த படியே முதல் ஆளாக மாவட்ட ஆட்சியர் கருங்குளம் வந்தார். தொடர்ந்து கமிஷனரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர். உடனே பூஜை போட்டு பணியை மாவட்ட ஆட்சியர் மரு.சுகுமார் துவக்கிவைத்தார். அதன் பின் நான் நேற்கு கோரிக்கை வைத்த தருவை பச்சையாறு பகுதி செல்லாலாமா என கேட்டார்.
உடனே நானும் தருவை பிச்சுமணியும்முன்னால் செல்ல பின்னால் மாவட்ட ஆட்சியர் வாகனம் வந்தது. தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாகனமும் எக்ஸ்னரோ வாகனமும் வந்து சேர்ந்தது.
தருவையில் மடை மீது செல்லமுடியாத அளவுக்கு முட்செடிகள் அடர்ந்து காண ப்பட்டது. அந்தஇடத்துக்குள்ளும் நுழைந்துசென்று ஷட்டர் பகுதியை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர். இந்த பகுதியில் உள்ள 13 ஷட்டர்களும் மோசமாக உள்ளது என பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து, இதற்கு என்ன செய்ய போகீறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், வரும் காலத்தில் மழை காலம் வரும் முன்பு இங்குள்ள ஷட்டர்ஸ்களை முழுவதும் பழுதுபார்த்து விடுவோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரி கூறினார்கள். சொன்னபடியே தருவைக்கு வருகைதந்து பாளையங்கால்வாய் பிரியும் இடத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பழவூர் அணைக்கட்டு துவங்கும் இடத்தில் இருந்து கோபாலசமுத்திரம், தருவை, முன்னீர்பள்ளம் பகுதியிலும் தூர் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தாமிரபரணி ஆர்வலர்கள் சார்பில் நன்றியை தெரிவிததுக்கொள்கிறேன். என்னோடு உறுதுணையாகஇருந்த தருவை பிச்சுமணி, எக்ஸ்னரோ நிறுவனத்தினை சேர்ந்தஸ்ரீனிவாசன், ராதா, கபடி முருகன், விவசாயிகள் சங்கத்தலைவர் பாலையா உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டேன்.
குன்னத்தூர் பகுதியில் திருநெல்வேலி கால்வாய் மற்றும் நைனார் குளம் கிளை கால்வாய் பிரியும் இடத்திலும் கல்லணை பள்ளி அருகே நயினார் குளம் கால்வாயினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கார் சாகுபடிக்கு முன்பாக அமலை செடிகள் அகற்றுவதும் தூர் வாருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தாமிரபரணி வடிநிலை கோட்ட பொறியாளர் கோவிந்தராசு நெல்லை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் சந்திரமோகன் உதவி செயற்பொறியாளர்கள் ஆவுடைய நாயகன் தங்கப்பாண்டி உதவி பொறியாளர் சிவா நந்தினி, பாளையங்கோட்டை தாசில்தார் இசைவாணி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோலவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்இளம் பகவத் அவர்கள் வழிகாட்டுதலில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் &ஆழ்வார்திருநகரிஇடையே உள்ள தாமிரபரணி ஆற்றில் முள்செடிகளை அகற்றும் பணியை மீண்டும் துவக்கிவைத்தோம். இதற்கு ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுத்தோம். அங்கும் எக்ஸ்னரோ நிறுவனம் நமக்கு தேவையான நடவடிக்கையை எடுத்தது. நானும் அதில் ஒரு பங்காளராக கலந்துகொண்டேன்.
( நதி வற்றாமல் ஓடும்)