பாளையங்கோட்டை வ.உ.சி திடலில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
முதல் நாள் நடந்த கருத்தரங்கில் கோட்டாட்சியர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் துணைத்தலைவர் ரமேஷ் ராஜா வரவேற்றார். சூழலியாலாளர் நக்கீரன் சூழலியல் பார்வையில் பொருநை என்ற தலைப்பிலும், ஆவணப்பட இயக்குனர் ஆர். ஆர். சீனிவாசன் ஆதிச்சநல்லூரும் பொருநை நாகரீகமும் என்ற தலைப்பிலும்,எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொருநை கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும் பேசினர். முத்து சாமி நன்றி கூறினார். எழுத்தாளர் நாறும்பூ நாதர் நன்றி கூறினார்.
திருநெல்வேலி புத்தக கண்காட்சியை கலக்கும் பொருநை அருங்காட்சியகம்.
சென்னை புத்தக கண்காட்சியில் அமைந்திருந்தது போலவே பாளையங்கோட்டையிலும் பொருநை அருங்காட்சியகம் அமைந்திருந்தது. இதில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தது. புத்தக கண்காட்சிக்கு இது கூடுதல் பெருமை சேர்த்தது. தொல்பொருள் தோண்டி எடுக்கப்படும் இடத்தை தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். விளக்க விபரங்களும் இடம்பெற்ற இருந்தன. இந்த தொல்பொருள் அருங்காட்சிய அரங்கம் பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இது திருநெல்வேலிக்கு மிகவும் புதிதாகவே இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் ரெட்டியார் பட்டி மலையில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு இந்த மாதிரி அருங்காட்சியகம் முன்னோடியாக இருந்தது.
கடந்த புத்தக கண்காட்சியின் போது பேசிய அப்போதைய தொல்லியல் துறை இயக்குனர் உதய சந்திரன் , “அடுத்த ஆண்டு இங்கு ஆதிச்சநல்லூர் குறித்த நூல் பிரமாண்டமாக வெளியிடப்படும்” என பேசினார். ஆனால் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு ஒரு படி மேலே போய் ஆதிச்சநல்லூர் சிவகளை கொற்கை மாதிரி அருங்காட்சியகத்தினையே ஏற்பாடு செய்து விட்டார். இதற்காக உதவியாக இருந்த தொல்லியல் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், தொல்லியல் இயக்குனர் சிவானந்தம் ஆகியோருக்கும் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து கொள்கிறார்கள்.


