தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. குலதெய்வ வழிபாடு என்னும் இந்த பங்குனி உத்திர திருவிழாவிற்கு அனைத்து பக்தர்களும் தங்களின் குல தெய்வத்தை வழிபட வருகை தருவார்கள். தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் சென்னை, மும்பை போன்ற பகுதிகளில் இருந்தாலும் இந்த பங்குனி உத்திர திருவிழாவிற்கு எப்படியும் தங்களின் குல தெய்வத்தை வழிபட வருகை தருவார்கள். அதிலும் மிகவும் முக்கியமானது தென்மாவட்டங்களில் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டமாகும். இந்த மாவட்டங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள் இந்த மாவட்டங்களில் உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப்பகுதியில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளது. செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா, மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, அழகர் சாஸ்தா, ஏரல் இருவப்பபுரம் பெரும் படை சாஸ்தா, குலசேகரநத்தம் கரும்புளிசாஸ்தா, ஆதிச்சநல்லூர் தீரன் தம்பிரான், கால்வாய் நம்பி சாஸ்தா, வல்லகுளம் சின்னத்தம்பிசாஸ்தா, தோழம்பண்ணை பொய்சொல்லா மெய்யன், அனவரதநல்லூர் தென்னம்பாண்டி சாஸ்தா, நாட்டார்குளம் வெயிலுகந்த சாஸ்தா உள்பட பல சாஸ்தாககோயில்களில் கூட்டம் அலைமோதிககொண்டிருந்தது. இன்றைய தினம் இந்த பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களது குல தெய்வங்களை வழிபட காலை முதலே இருசக்கர வாகனம் மற்றும் தங்களது கார்களில் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதனால் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோவிலில் காலை முதலே 2 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகாலமாக சாஸ்தா வழிபாட்டுக்கு மக்கள் கொரேனா அலை காரணமாக வரவில்லை எனவே இந்த வருடம் ஆர்வத்துடன் வந்து கோயிலில் தங்கி, பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வந்தனர். இரவு வேளையில் குடும்பத்துடன் அமர்ந்து கொடைவிழா மற்றும் வில்லிசை நிகழ்ச்சியை காண காத்து இருந்தனர். மும்பை அன்னதான அறக்கட்டளை சார்பாக அன்னதானம் மிகச்சிறப்பாக நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


