
தாமிரபரணிக் கரையில் அம்மனுக்குக் கல்மண்டபம் எழுப்பி அதில் எழுந்தருளச் செய்துள்ளார் மன்னர். அன்று முதல் தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள அம்மன் நதியினைக் குறிக்கும் வகையாகப் ‘பேராற்றுச் செல்வி’ எனும் திருநாமத் தில் அருளாட்சி செய்கிறார். இக்கோயிலானது 800 வருடங்களுக்கு முற்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர்.
துர்கன் என்ற அரக்கனை அழிக்க எல்லாம் வல்ல சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். அப்போது சிவ பெருமான் அருகில் இருந்த பார்வதி தேவியைப் பார்த்து, ‘ஆடலாற் காளி வருதி’ என்றார். உடனே ஆதி நாயகியிடம் இருந்த காளி, பேராற்றல் கொண்டவளாக வெளிவந்தாள்.
இவ்வாறு வெளிவந்த இவள் செல்வி எனப் பெயர் பெற்று, மழு, எழு, பிண்டி, பாலம் முதலிய ஆயுதங்களைக் கொண்டு துர்கனின் வன்படைகளை அழித்து அரக்கனையும் ஒழித்தாள். இந்த அன்னையே பேராற்றில் நிலையானாள் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.
குட்டத்துறை கரையில் தான் பேராத்து செல்வியம்மன் கோயில் உள்ளது. இறைவி பெயர் பேராத்துச் செல்வி என்பதாகும். இங்குள்ள தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம், தலவிருட்சம் வேம்பு, காரண ஆகமம் படி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
சித்திரை மாதம் மூன்றாம் செவ்வாய் மற்றும் நான்காம் செவ்வாய் கிழமைகளில் கொடை விழா இக்கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிமாதம் ‘முளைக்கட்டும் திருவிழா’ மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. புரட்டாசி மாதம் விஜயதசமியன்று ‘தசரா திருவிழா’ வெகு விமரிவையாகக் கொண்டா டப்படு கிறது. அன்றைய தினம் பேராத்துச் செல்வியம்மன் திருவுலா புறப்பட்டு பாளையங்கோட்டைக்குச் சென்று திரும்புவதும் மறுநாள் தீர்த்தவாரி நடைபெறுவதும் மிகப் பிரபலமாகும்.
அப்பண சாமி அவர்கள் பேர் சொல்லும் நெல்லைச்சீமை என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூலில் பேராத்து செல்வி அம்மன் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார்.
‘கானமர் (கான் அமர்) செல்வி, காடமர் (காடு அமர்) செல்வி என்ற தெய்வங்கள் பழங் காலத்தில் வழங்கப் பெற்றது போல இக் காலத்தில் திருநெல்வேலிப் பகுதியில் பேராற்றுச் செல்வி, வடக்கு வாய்ச் செல்வி போன்ற தெய்வங்கள் வணங்கப்படுகின்றன. என்று எல்.ஜி.யார் குறிப்பிடுகிறார் என அவர் அந்த நூலில் குறிப்பிட் டுள்ளார்.
திருநெல்வேலி நகரைச் சுற்றித் தவழ்ந்து வரும் தாமிரபரணி ஆற்றின் வண்ணாரப்பேட்டை படித்துறையில் பேராற்றுச் செல்வி கோயில் உள்ளது. ஆற்றில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருப்பதற்காகவும், பயிர்கள் செழித்து வளரவும் பேராற்றுச் செல்வி வணங்கப் படுகிறாள்.
இக்கோயில் சைவ வேளாளர் களுக்குச் சொந்த மாக உள்ளது. இருப்பினும் இக்கோயில் இப்பகுதியி லுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமாக இருந்தது என்றும் பின்னர் அது மாறிவிட்டது என்றும் எல்.ஜி.யார் போன்ற ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். இருந்தாலும் சைவ வேளாளர், தாழ்த்தப்பட்ட சமூகத் தினர் என இரு தரப்பினரும் அடிப்படையில் விவசாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் முற் காலத்தில் விவசாயத்தைச் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் வழிபட்ட கோயிலாக இது இருந்திருக்க வேண்டும். இப்போதும் இக் கோயிலில் நடைபெறும் சித்திரை மாதக் கொடையை ஏழு கிராமத்தினைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களே நடத்தி வருவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
கோயிலில் ஆகம விதிப்படி வழிபாடுகள் செய்யப்படினும் சித்திரைக்கொடை நாளில் மட்டும் நடு இரவில் கோயிலுக்கு வெளியில் புலால் படையல் நிகழ்கிறது. இக்கோயிலில் பெண்கள் கணக்கு சொல்கிறார்கள். கோயிலில் குறி சொல்லுவதையே கணக்குச் சொல் லுதல் என்கிறார்கள். இவ்வாறு கணக்குச் சொல்லும் பெண்களில் எல்லா இனத்துப் பெண்களும் இருக்கிறார்களாம். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் குறி சொல்வதைத் தாம் பார்த்ததாக எல்.ஜி.யார் கூறுகிறார். கணக்குச் சொல்லும் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண் ஒருவர் பாடிய பாடல் வருமாறு:
‘சாக்கடை கடந்து வந்தேன் எச்சிலை மிதித்து வந்தேன் பிழை பொறுக்க வேண்டும் தாயே ஏழுலகம் கும்பிட்டாலும் – தாயே ஏழு பச்சேரியும் சேர்ந்து வந்தா கண்ணே ஜொலிக்குதம்மா’
பேராற்றுச் செல்வி கோயில் தவிர திருநெல்வேலி பகுதியில் வடக்கு வாய்ச் செல்வி, கருப்புச் செல்வி, காட்டுச் செல்வி முதலிய தெய்வங்களும் உள்ளன. பழங் காலத்தில் பூம்புகார் காவல் தெய்வமாக சம்பாபதியும், மதுரைத் தெய்வமாக மதுராபதியும் விளங்கியது போல வடக்கு வாய்ச் செல்வி ஊருக்குக் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறாள். வடக்கு வாய்ச் செல்வியிடம் மழை வேண்டி மக்கள் முறையிடுகின்றனர் என்று முக்கூடற் பள்ளு பாடுகிறது. பேராற்றுச் செல்வி பேராத்துச் செல்வி என்றும் அழைக்கப்படுகிறாள்.
திருநெல்வேலியில் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றொரு அம்மன் கோயில் தீப்பாச்சியம்மன். இந்த ஆலயத்தினை பற்றிய வரலாறு கீழ்கண்டவாறு பேசப்படுகிறது.
இவளை சீதையம்மன் என்றும் தீ நாச்சியார் என்றும் அழைக் கிறார்கள்.
ராமயான காதபாத்திரமான சீதை பேரில் தீப்பாச்சியம்மன் என்று அழைக்கப்படுகிறார். சீதை தான் பிற்காலத்தில் தீ பாய்ந்த அம்மன் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழிபாடு வண்ணார் சமுதாயத்தின் மீது ஏற்ப்பட்ட வழிபாடாடாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இராமாயணத்தில் ஒரு வண்ணார் பேச்சைக் கேட்டு, கர்ப்பம் தரித்த நிலையிலும் சீதை காட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அங்குதான் அவள் குழந்தை களைப் பெற்றெடுக் கிறாள். பின்னர் நாடு திரும்பும் அவளை ராமன் சந்தேகப்படுகிறான். எனவே அவள் தான் குற்றமற்றவள் என்பதற்காக தீயில் இறங்குகிறாள். எனவே இவளை அவள் தீப்பாய்ந்த அம்மன் என்று கூறுகிறார்கள். பெரும் பாலும் நெல்லைச்சீமை மக்களால் அழைக்கப்படுகிறாள். வண்ணார் வார்த்தையால் சீதை காடடுக்கு அனுப்பபட்டு அவதிப் பட்டதால் வண்ணார்களுக்க சாபம் ஏற்படுகிறது. என்றும் அந்தசாகத் தினை போக்க வண்ணார்கள் அவளைத் தெய்வமாக வழிபடு கிறார்கள் என்ற கதையும் இங்குள்ள மக்கள் மத்தியில் வாய்மொழியால் வழங்கப்படுகிறது.
தீப்பாய்ந்த அம்மன் கோயில் பெரும்பாலும் ஓலைக்குடிசையிலேயே இருந்தது. கொற்றவை கோயில் ஓலைக் குடிசையிலேயே அமைய வேண்டும் என்ற முடிவு தொன்று தொட்டு இருந்து வருவது கவனிக்கத் தக்கது. குச்சரக் குடிசை என்று சிலப்பதிகாரம் இதனைக் குறிப்பிடுகிறது.
தற்போதெல்லாம் தீப்பாச்சியம்மன் மிகப்பெரிய கட்டிடத்தில் அமைந்துள்ளது. தீப்பாய்ந்த அம்மன் வண்ணார் பேட்டையில் பிரதான சாலையில் மிகப்பிரமாண்டமாக இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட அய்யனார்குளம் பட்டியில்தீப்பாச்சியம்மன் வரலாறு வேறு மாதிரியாக பேசப்பட்டு வருகிறது.
ஊருக்கு ஊர் வரலாறு மாறினாலும் பெண் ஒருத்தி பல இன்னல்களுக்கு இடையே தீக்குளித்த பின் அவள் தெய்வமாகி அந்த பகுதியில் தீபாச்சியம்மன் என்று அழைக்கப்படுகிறார்.
(நதி வற்றாமல் ஓடும்)