புட்டாரத்தி அம்மன் குறித்து கூடுதல் தகவலும் கிடைத்தது. எனவே அதைப்பற்றி தொடர்கிறோம். புட்டாரத்தி அம்மன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் வட மேற்கில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயில் ஆகும், இங்கு அம்மன் “பிட்டு” பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதால் பிட்டாபுரத்தி என அழைக்கப்படுகிறார், மேலும் அவர் பிணி தீர்க்கும் தெய்வமாக வழிபடப்படுகிறார். இத்தல வரலாறு, நெல்லையப்பர் கோவில் கட்டப்படும் முன், குளத்தில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்றின் கதையுடன் தொடர்புடையது.
“பிட்டாபுரத்தி” என்ற பெயர், பிட்டு என்ற ஒரு வகை இனிப்பு உணவை நைவேத்தியமாக அம்மனுக்குப் படைக்கப்படுகிறது என்பதிலிருந்து வந்தது.
வரலாற்று ரீதியாக, நெல்லையப்பர் கோவில் கட்டுவதற்கு முன்பே, ஒரு குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிள்ளையார் சிலையை, குளத்தின் அருகே உள்ள பிட்டாபுரத்தி அம்மன் கோயில் பூசாரிக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த விநாயகர், “குளத்தில் இருக்கிறேன், என்னை எடுத்துக் கொண்டு போய் பிட்டாபுரத் அம்மன் கோயில் பூசாரியிடம் கொடுத்து அங்கேயே என்னை பிரதிஷ்டைச் செய்யுங்கள்!” என்று அசரீரியாகக் கூறியது. அதன்படி, விநாயகர் அந்த கோவிலில் கோயில் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த அம்மன் நோய்களை நீக்கும் சக்தி கொண்டவளாகவும், வடக்கு வாயில் செல்வி என்றும் அழைக்கப்படுகிறார்.
இக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.
பிணி தீர்க்கும் பிட்டாபுரத்தி அம்மன், குறிப்பாக குழந்தைகள் நோய்களைப் போக்கும் தெய்வமாக வழிபடப்படுகிறார்.
பேராத்துசெல்வி
பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளைத் தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டார். அம்பாளுக்குக் கோயில் கட்டி வழிபட வேண்டுமென அவருக்கு விருப்பம். ஆனால் கோயில் கட்டுமளவிற்கு அவரிடம் வசதி இல்லை. எனவே, அம்பாள் சிலையையாவது பிரதிஷ்டை செய்ய வேண்டுமென நினைத்தார்.
ஒருநாள் இரவில் அவரது கனவில் அம்பாள் தோன்றினாள். தாமிரபரணி நதிக்கரையில் மூன்று அத்திமரங்கள் ஒன்றாக இருக்கும் இடத்தின் அருகில் ஆழமான பகுதி இருப்பதாகச் சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தான் இருப்பதாகக் கூறினாள். மறுநாள் அவர், அந்த இடத்திற்குச் சென்று வலையை வீசினார். அப்போது, அம்பாள் விக்கிரகம் அவருக்குக் கிடைத்தது. நதிக்கரையிலேயே சிறு குடிசை அமைத்து, அம்பாளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவள் பெரிய ஆற்றில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், ‘பேராற்று செல்வி’ என்ற பெயரும் பெற்றாள். இக்கோயிலில் அம்பாள் 8 கைகளில் ஆயுதங் களுடன், வடக்கு நோக்கி அருளுகிறாள். இக்கோயிலுக்கு எதிரே சுடலைமாடன், பேச்சியம்மன் சன்னதி உள்ளது. இவர்களும், பிரகாரத்தில் உள்ள சங்கிலிபூதத்தார், நல்ல மாடன் இருவரும் பீட வடிவில் இருப்பது விசேஷம். தளவாய்ப்பேச்சி தனி சன்னதியில் இருக்கிறாள். வளாகத்தில் லிங்கேஸ்வரர், சக்கரவிநாயகர் இருக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
காசிமா நகர வேந்தன்
கவலுறு குட்டம் நீங்கி
மாசிலா ஈசன் தோன்றி
மனதுற நினைத்த வேந்தே
பேசிடாப் பெருமை வாய்ந்த
பிறங்குயர் பொருநைத் தென்பால்
நேசவா என்ற குட்ட
நீர்த்துறைத் தீர்த்தம வாழி
இவ்விடத்தில் தாமிரபரணி நதிக்கு, ‘உத்திர வாகினி’ என்று பெயர். பொதுவாக வடக்கு நோக்கிச் செல்லும் நதிகள் புண்ணிய மானதாகக் கருதப்படும். இவ்விடத் தில் இந்நதி வடக்கு நோக்கியே செல்கிறது. எனவே, இங்கு தீர்த்த நீராடி அம்பாளை வழிபடுவது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இங்கு, ‘குட்டகுறை தீர்த்தம்’ உண்டு.
நீதி நெறி தவறாமல் காசி மாநகரை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வினைப்பயன் காரணமாய் குஷ்ட நோய் ஏற்பட்டது. ராஜ வைத்தியம் செய்து பார்த்தும் நோய் தீரவில்லை.
கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்கி நோய் தீர வேண்டும் என்று வேண்டினான். பல ஆண்டுகள் ஆகியும் பலன் கிடைக்கவில்லை. எனவே மனம் உடைந்து போனான்.
ஒருநாள் வழக்கம்போல் கங்கையில் நீராடிக் காசி விஸ்வநாதரை வணங்கி நின்றான். “இறைவா என்னால் தாங்க முடியவில்லை. இன்று என் நோயைக் குணமாக்கி என் துன்பத்தைப் போக்கு. இல்லையேல் உன் முன்னாலேயே என் உயிரைப் போக்கி விடுவேன்” என்று சொல்லித்தனது உயிரைப் போக்கிக்கொள்ள முயற்சி செய்தான்.
அப்போது காசி விஸ்வநாதர் அவனுக்குக் காட்சி தந்தார், “மன்னா தென் திசையில் தமிழ் வளர்த்த பொதிகை மலையில் தோன்றிய புண்ணிய நதியான பொருநை நதிக் குறிஞ்சி, மருதம், முல்லை , நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களிலும் பாய்ந்து செந்நெல் , கன்னல் ஆகிய பயிர்களை வாழ வைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கலை, பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம் ஆகிய தமிழ் உயிர்களையையும் வாழ வைத்துக்கொண்டிக்கிறது. அந்தத் தமிழப் பொருநையின் கரையில் சிந்து பூந்துறை என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. நீ அங்கு சென்று அந்தத் தீர்த்தத்தில் நீராடி, தொல்லை எல்லாம் தீர்த்தருளும் எலலையில்லாக் கருணை கொண்ட நெல்யைப்பரை வணங்கு. உன் நோய்தீரும்” என்று கூறினார்.
காசி விஸ்வநாதன் கருணை மொழியைக் கேட்டுக் காசி மன்னன் பரிவாரம் புடை சூழ திருநெல்வேலி தாமிரபரணி நோக்கிப் புறப்பட்டான்.
வரும் வழியில் உள்ள பல தெய்வங்களை வணங்கிக் கொண்டே திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தான்.
சிந்துபூந்துறைக்குக் கிழக்கே ஓர் இடத்தில் தாமிரபரணியில் நீராடினான். பின்பு நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் வணங்கி நின்றான். அவர்களிடம் தன்னுடைய குஷ்ட நோயைத் தீர்த்து அருள வேண்டும் என்று மனதார வேண்டினான். இவ்வாறு தினந்தோறும் பொருநை நதியிலும், பொற்றாறைத் தீர்த்ததிலும் நீராடி நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி மனமுருக வேண்டி வந்தான்.
சில நாள்களில் அவனுடைய குஷ்ட நோய் ஒரு விரல் அளவு குறைந்தது. பின்னர் நாள்தோறும் ஒரு விரல் அளவு குறையத் தொடங்கியது.
இறைவன் அருளால் வினை பொடிப் பொடியாய் ஆவது போல், நெல்லையப்பர் அருளால குஷ்ட நோய் படிப்படியாக குறைந்தது.
ஒரு நாள் நோய் முற்றிலும் நீங்கி விட்டது.
காசி மன்னன் நீராடிக் குஷ்ட நோய் நீஙகப் பெற்றான் என்பதால் அத்தீர்த்தத்திற்குக் குட்டத்துறைத் தீர்த்தம் என்று பெயர் பெற்றது.
இவ்விடத்துக்கு பேராற்று அம்மன் வந்த கதை வேறு மாதிரியாகவும் பேசப்படுகிறது. அந்த கதைத்தான் என்ன?
(நதி வற்றாமல் ஓடும்)


