தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஜீன்குமார் முதல் நிலை பெண் காவலர் பூர்ணகலாஆகியோரின் சிறப்பான பணியைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் எல்லைக்குட்பட்ட தங்க நகைகள் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்றுத் தந்த தலைமை காவலர் கணேசன் அவர்களது தீவிரமான புலனாய்வு மற்றும் தொடர் முயற்சியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் பெண் காவலர் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு இன்று (16.08.2026) நேரில் அழைத்து, அவர்களின் பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


