விளாத்திகுளம் அருகே தீண்டாமை சுவரை அகற்றக் கோரியும், பட்டாவை ரத்து செய்யக் கோரியும் தலித் சமுதாய மக்கள் சுதந்திர தினத்தை புறக்கணித்துச் சுடுகாட்டில் குடியேறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் தலித் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில், கடந்த 1922-ஆம் ஆண்டு கல் மண்டபம் அமைத்துத் தேவாலயம் கட்டித் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேவாலயத்தின் முன்புறம் உள்ள பொதுப்பாதையை மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆக்கிரமித்து, 1973-இல் மாட்டுத் தொழுவம் அமைத்து, 3 அடி உயரத்தில் சுவர் ஒன்றை எழுப்பினார். இந்த இடத்திற்கு 1994-ஆம் ஆண்டு விளாத்திகுளம் வருவாய்த்துறை சார்பில் நத்தம் நிலவரித் திட்டத்தின்கீழ் பட்டாவும் வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் 3 அடியாக இருந்த மண் சுவர், சில ஆண்டுகள் கழித்து 15 அடி உயரத் தீண்டாமை சுவராக மாற்றிக் கட்டப்பட்டுள்ளது. இந்தச் சுவரை அகற்றக் கோரியும், ஆக்கிரமிப்பு நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யக் கோரியும் அப்பகுதி தலித் மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
கடந்த 2024 ஜூலை 24 முதல், விளாத்திகுளம் வருவாய்த்துறை வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தியும், 1 ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரியும் வருவாய்த்துறை அலுவலக முற்றுகை, குடியரசுத் தினம் மற்றும் சுதந்திர தினப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாகப் போராடியும் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாததால், இந்த ஆண்டும் சுதந்திர தினத்தைப் புறக்கணித்த மக்கள், சங்கரலிங்கபுரம் கிராமத்தின் மேற்கே உள்ள சுடுகாட்டில் குடியேறினர். கைக்குழந்தைகளுடன் சுடுகாட்டிலேயே தங்கி, சமையல் செய்து உண்டு, இரவு-பகலாகப் போராட்டம் நடத்தித் தங்களின் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஆட்சியாளர்கள் மாறினாலும் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு இதுவரை முறையான தீர்வு கிடைக்கவில்லை என்றும், அரசு உடனடியாக தலையிட்டுத் தீண்டாமை சுவரை அகற்றி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


