தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சந்திரா தியேட்டர் உரிமையாளர் ஜான்பால். இவருக்கு சொந்தமான தோட்டம் சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தியில்அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தில் தென்னை மரங்கள் பனை மரங்கள் ஆடு மாடுகள் என ஏராளமானவை உள்ளன. ஆடு மாடுகளை பராமரிப்பதற்காகவும் தோட்டத்தை பாதுகாப்பதற்காக இரண்டு காவலாளிகளை நியமனம் செய்துள்ளார். காலையில் ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஒருவரும் மாலை ஆறு மணியிலிருந்து மறுநாள் காலை ஒரு மணி வரை ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சந்திரசேகர் வயது 58. இவர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
வழக்கம்போல் ஜூலை 9ஆம் தேதி காலை ஆறு மணிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில் அந்தத் தோட்டத்தில் ஆடு மாடுகளை பராமரிப்பதற்காக ஜெயா என்பவர் பணியாற்றி வருகிறார்.
அன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் ஜெயா தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சந்திரசேகர் தலைப்பகுதியில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த சந்திரசேகர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எதற்காக இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.
தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவர் கம்பால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் பண்டாரவிளை சுயம்புலிங்க சுவாமி கோயில் தெருவை சேர்ந்த அம்பலகாரன் மகன் பெருமாள் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் இவர் கடந்த 40 வருடங்களாக அந்த பண்ணை தோட்டத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது இவரை வேலையில் இருந்து தோட்டத்தின் மேலாளர் நீக்கியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் பண்ணை தோட்ட காவலாளி சந்திரசேகரால் தான் வேலை இழந்ததாக கருதி அவரை கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
பெருமாளை கைது செய்த சாயர்புரம் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


