கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் செளபாக்யா மண்டபத்தில் நடந்த புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஒரு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட தலைமை உதவி ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி,ரோட்டரி மாவட்ட அவார்டு சேர்மன் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் ப்ளாரோ ஜீனித்தா நெல்சன் 14 புதிய உறுப்பினர்களுக்கு ரோட்டரி பட்டனை அணிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் மீரான்கான் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை,கல்வி உதவித்தொகை,மைக் செட்,காதொலிகருவி,நோட்டுப் புத்தகங்கள், மின்விசிறி உள்ளிட்ட 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,ரோட்டரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சங்கங்களில் கோவில்பட்டி சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ரோட்டரி சங்கங்கள் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு ரோட்டரி உறுப்பினரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அனைத்து ரோட்டரி சங்க உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து புதிய நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் 2024-25ம் ஆண்டிற்கான தலைவராக தாமோதர கண்ணன்,செயலாளராக ராஜமாணிக்கம், பொருளாளராக கிருஷ்ணசாமி உள்பட புதிய நிர்வாகிகளுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் மீரான்கான் சலீம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் ஏராளமான ரோட்டரி சங்க உறுப்பினர்களின் குடும்பங்கள் உள்பட பொதுமக்கள்,பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் வைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்பில் பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் நிலாவை பார்வையிட்டு வியந்தனர்.