நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலூகாவிற்கு உட்பட்ட துலுக்கர்பட்டியில் நம்பியாற்றுப் படுகையில் அகழாய்வு பணியை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். நெல்லையில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகம் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரிகம்தான் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளது என்பதை உலகறியச் செய்யும் வகைகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்றுப்படுகையிலும் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இதன் தொடக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு , தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அகழாய்வு பணியைத் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம்தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்தமிழமுதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கீழடி, சிவகளை , வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடத்தப்படும் என அறிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 11- ந்தேதி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதற்காக 15 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட துலுக்கர்பட்டியில் நம்பியாற்றின் கரையில் அமைந்துள்ள விளாங்காடு தொல்லியல் மேட்டில் அகழாய்வு பணி இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. துலுக்கர்பட்டி தொல்லியல் மேடு வரலாற்றில் மிக முக்கியமான இடமாகும், இந்த இடத்தில் மனித நாகரிகம், தமிழ் மொழியின் நாகரிகம் இரும்புக் காலம் தொட்டு நிலவியதற்கான சான்றுகள் உள்ளது . இந்த பகுதியின் தொன்மை என்பது சிவகளை, ஆதிச்சநல்லூர் காலகட்டத்தின் சமகாலத்தில் உள்ளது .இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளுவது மூலமாக இந்த பகுதியின் தொன்மை, இங்கு வாழ்ந்த மக்களின் தொன்மையின் காலக்கணிப்பை உண்மையாக அறிந்து கொள்ள முடியும். இங்கு கிடைக்கக்கூடிய முதுமக்கள் தாழிகள், குறியீடுகளுடன் இருக்கக்கூடிய பானை ஓடுகள், தொன்மையை விளக்குவதாக இருந்தாலும் இதன் தொன்மையை அகழாய்வின் மூலமாக கரிமப் பகுப்பாய்விற்கு உட்படுத்தி இந்த நம்பியாற்றின் நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கக் கூடிய துலுக்கர்பட்டி தொல்லியல் மேட்டில் ஏராளமான சான்றுகளை அறிவுலகத்திற்கு எடுத்துக் கூற முடியும். துலக்கர்பட்டி தொல்லியல் மேடு 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இதில் பல கட்டங்களாக ஆய்வு நடத்தப்படும். பொருநை அருங்காட்சியகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது . பொருநை நதிக்கரைப்பகுதியில் பல இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளோம் இதில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களையெல்லாம் எடுத்து தனித்தனியாக கேலரிகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும், பொருநை அருங்காட்சியகம் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தொல்லியல்துறை இயக்குனர் சிவானந்தம் , திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர் , கனகராஜ், சாந்தி , உள்ளிட்டவர்கள் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.


