ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. திரளானோர் பங்கேற்பு. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி கோயில்களில் 9வது ஸ்தலமாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கடந்த 9ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி பொலிந்துநின்றபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிப் புறப்பாடு நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 6 மணிக்கு உற்சவர் பொழிந்து நின்ற பிரான் சிறப்பு பூஜையுடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேர் புறப்பட்டது. மேலரத வீதியில் புறப்பட்ட தேர் வடக்கு ரதவீதி வழியாக கீழரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் மேல ரத வீதியில் தேர் நிலைக்கு வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோபால என்ற கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலிசார் செய்திருந்தனர்.


