தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு ஆவண எழுத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதியக் குழுவின் உறுப்பினர் க. சிவசங்கரராமன்,விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சரின் சீரிய ஆட்சியில், உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு “தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதியம்” அமைக்கப்பட்டது. அரசுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி, சுயநிதி அடிப்படையில் இந்த நிதியம் செயல்பட்டு வருகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவித்தொகைகள் மிகக் குறைவாக இருப்பதால், அவற்றை தற்போதைய வாழ்வாதாரச் சூழலுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் தற்போதும் பரிசீலனையிலேயே உள்ளன. அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
நடைபெறவுள்ள சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி எண் 110-ன் கீழ் ஆவண எழுத்தர்களின் நலன் காக்கும் வகையில் முறையான அறிவிப்புகளை வெளியிட்டு, நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆவண எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


