குரும்பூர் அருகே வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருள்கள் மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார், தலைமை காவலர் பால சுப்பிரமணியன், முதல் நிலை காவலர் ஆனந்த கணேஷ் மற்றும் குரும்பூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சந்தோஷ் ஆகிய போலீசார் நேற்று அருளானந்தபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குரும்பூர் அருளானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை மகன் ஸ்ரீநாத் துரை (எ) சின்னத்துரை (44) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ரூ.28,500 மதிப்புள்ள 65 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 427 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


