எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தாமிபரணி கரையில் முத்தாலங்குறிச்சி என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். 1986 ல் தேவிவார இதழில் துணுக்கு எழுத்தாளராய் அறிமுகமாகி தற்போது 60 நூல்களை எழுதியுள்ளார். தாமிரபரணி, ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை, சித்தர்கள், 20க்கு மேற்பட்ட ஜமீன்தார்கள் வரலாறு, பொதிகை , அத்ரி, குற்றால மலை பயணம் என இவரது நூல்கள் தென் தமிழ் நாட்டு வரலாறுகளை களப்பணி மூலமாக பகிர்ந்து கொண்டே செல்கிறது. 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் என்ற நூலை எழுதியுள்ளார். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தமிழ் ரத்னா சிறப்பு விருதைபெற்றவர். தாமிரபரணியில் கடந்த 15 வருடகாலமாக நடந்தே வந்து முதல் பகுதியை தலைத்தாமிரபரணி என்னும் பெயரில் 1000 ம் பக்க நூலாக வெளியிட்டுள்ளார். தொடர்ந்து இடை கடை தாமிரபரணி தயாராகி கொண்டிருக்கிறது. ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒன்றிய அரசின் சார்பில் அதற்கான ஆணையை பெற்று தந்தவர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்கள் ஆசிரிராக பணியாற்றிய தாமிரபரணி தடம் என்னும் ஆங்கில நூலில் தகவல் மற்றும் புகைப்பட கலைஞராக பணியாற்றியவர். சைவசிந்தாந்த நூல் பதிப்பு கழகம், தினத்தந்தி, தினகரன்,(சூரியன் பதிப்பகம்) விகடன், தி. தமிழ் திசை இந்து, தினமலர்,(தாமரை பிரதர்ஸ் மீடியா) காவ்யா, பொன்சொர்ணா போன்ற பதிப்பகங்கள் மூலம் இதுவரை 60 நூல்களை வெளியிட்டுள்ளார். வசந்த தொலைக்காட்சியில் நெல்லை மண்பேசும் சரித்திரம் என்னும் தொடரில் 75 வாரம் பயணித்துள்ளார். நெல்லை வானொலியில் 25 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். இவரது நாடகங்கள் கிராமங்களில் மேடை நாடகமாக அரங்கேறியுள்ளார். நடிகை ரோகிணி இயக்கத்தில் அப்பாவின் மீசை, கே.எஸ். தங்கசாமியின் எட்டுதிக்கும் மதயானை, இப்ராகீம் ராவுத்தரின் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற மூன்று திரைப்படங்களில் சிறு காட்சிகளில் நடித்துள்ளார்.


