தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவில்பட்டி பகுதியில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் கனமழை கொட்டியதால் மெயின் ரோடு, புதுரோடு விலக்கு, மந்தித்தோப்பு ரோடு மார்க்கெட் ரோடு, ரெயில் நிலையம் முன்புள்ள ரோடுகளிலும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ஆறாக பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு ஊர்ந்து சென்றனர். இளையரசனேந்தல் ரெயில்வே சுரங்கப்பாதையிலும், பெத்தேல் பகுதியில் உள்ள சுரங்க பாதையிலும் சுமார் 3 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருச்செந்தூரில்
திருச்செந்தூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டிய கனமழையால் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது.
மேலும் சிவன் கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடிநகர் பகுதிகளிலும் விடிய விடிய கொட்டடித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.


