வீடு கடைகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடிகளை கீழே இறக்கி அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஆக. 13ம் தேதி முதல் ஆக. 15ம் தேதி வரை வீடு மற்றும் கடைகளில் தேசியக் கொடிகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனியார் கடைகள் காதிகிராப்ட் மட்டுமின்றி போஸ்ட் ஆபீஸ்களிலும் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. பெரும்பாலான வீடு மற்றும் கடைகளில் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக தேசியக்கொடிகளை பொதுமக்கள் ஏற்றினர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆன நேற்று இரவு வரையிலும் பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகள் மட்டுமின்றி வாகனங்களிலும் ஏற்றப்பட்ட தேசிய கொடிகள் கீழே இறக்கப்படாமல் இருந்தது.
இதனைதொடர்து, வீடு மற்றும் கடைகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடிகளை பத்திரமாக கீழே இறங்கி பாதுகாக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் கூறுகையில், தேசியக் கொடிகளை ஏற்றுவதற்கான விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 75வது ஆண்டு சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளித்து அதை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வீடு மற்றும் கடைகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடிகளை கீழே இறக்கிய பின்பு அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்தும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்கள் குறித்தும் பயன்படுத்துவார்கள் குறித்தும் பொதுமக்கள் துணிந்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாய் பாதுகாக்கப்படும். காவல்துறையினரின் தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு எளிதாய் தெரியும் வண்ணம் பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பதும் காவல்துறையின் கடமை என்ற அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
என்றார் அவர்.


